

தஞ்சாவூர்:
அன்றாடம் நாம் உண்ணும் உணவுகளில் அதிக அளவு பயன்படக்கூடிய ஒரு பொருள் பச்சை மிளகாய். சைவம், மற்றும் அசைவ உணவு வகைகளுக்கு அதிக அளவில் இதனை பயன்படுத்துவர். சமையலில் உப்புக்கு அடுத்தபடியாக காரம் தான் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் அதிக பரப்பளவில் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இதற்கு அடுத்தபடியாக தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் பச்சை மிளகாய் சாகுபடி நடைபெறுகிறது. நல்ல வடிகால் வசதியுடைய நிலங்களில் மிளகாய் சாகுபடி செய்ய ஏற்றது. மிளகாய் எல்லா பருவங்களிலும் சாகுபடி செய்தாலும் விதை உற்பத்திக்கு சரியான பருவத்தை தேர்ந்து எடுப்பது தான் மிகவும் அவசியம்.
விதை எடுப்பதற்கான பழ அறுவடைகளை முடித்து விதைகளை பிரித்து நன்கு உலர வைக்க ஏதுவான உலர்ந்த சூழ்நிலை இருத்தல் அவசியம். விதை உற்பத்தி செய்வதற்கு சிறந்த பருவம் ஜூன், ஜூலை மாதங்கள் ஆகும். ஆனால் மிளகாய் எந்த காலக்கட்டத்திலும் விளைவிக்கப்படும்.
தற்போது தஞ்சை மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக அம்மன்பேட்டை, கண்டியூர், திருவையாறு, பாபநாசம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. தொடர் மழையினால் மிளகாய் ஒன்றிரண்டு அழுகியும் காணப்பட்டது. தற்போது வடகிழக்குப்பருவமழை பெய்யவில்லை. இதையடுத்து மிளகாய் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அறுவடை செய்யப்பட்ட மிளகாய்களை தஞ்சை மற்றும் திருவையாறு பகுதியில் உள்ள மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று வியாபாரிகள் விற்பனை செய்து வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை பச்சை மிளகாய் கிலோ ரூ.40-க்கு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது கிலோ ரூ.25-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. விலை குறைவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.