

தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த குமாரபாளையம் மணியக்காரர் தோட்டத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. விவசாயியான இவர் கடந்த 15 ஆண்டுகளாக தனது தோட்டத்தின் பட்டியில் 30 ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றார். பின்னர் மாலை நேரம் ஆனதும் ஆடுகளை மீண்டும் பட்டிக்கு ஓட்டி வந்து, அவற்றை பட்டியில் அடைத்துவிட்டு அருகில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று காலை பட்டியில் இருந்த ஆடுகளை அவிழ்த்து விடுவதற்காக பட்டிக்கு சென்றார். அப்போது அங்கு 15 ஆடுகள் ரத்த வெள்ளத்தில் செத்துக் கிடந்தன. மேலும் 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தன. பட்டிக்குள் புகுந்த வெறிநாய்கள், ஆடுகளை கடித்து குதறி கொன்று இருப்பது தெரியவந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பழனிச்சாமி உடனடியாக தாராபுரம் போலீசார், கால்நடைத்துறை மருத்துவர் மற்றும் வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் சம்பவம் குறித்து கேட்டறிந்து விசாரணை நடத்தினர். காயம் அடைந்த ஆடுகளுக்கு கால்நடை டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
இது குறித்து விவசாயி பழனிச்சாமி கூறியதாவது:-
கடந்த 3 ஆண்டுகளாக தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்களின் இனப்பெருக்கம் அதிகமாக உள்ளது. இந்த நாய்கள் உணவு கிடைக்காமல் வெறியேறி தோட்டத்தில் வளர்க்கப்படும் ஆடுகளை தொடர்ச்சியாக கொன்று ரத்தம் குடித்து வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் பல கட்ட போராட்டங்கள் நடத்தியும், கலெக்டர், சப்-கலெக்டர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
வெறி நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த குறைந்தபட்சம் நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை கூட செய்ததில்லை. இதனால் நாய்களின் இனப்பெருக்கம் அதிகமாகி நகர் மற்றும் கிராம பகுதிகளில் அதிகளவில் நாய்கள் சுற்றித் திரிகின்றன. ஆடுகளை மட்டும் கடித்து ரத்தம் குடித்து வந்த நாய்கள் தற்பொழுது மாடுகள், கோழிகள், வீட்டில் வளர்க்கப்படும் பூனைகள், குழந்தைகள் மற்றும் பொதுமக்களையும் கடித்து விட்டு ஓடிவிடுகின்றன. எனவே வெறி நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.