ஒரத்தநாடு அருகே மின்கம்பியை மிதித்த விவசாயி மின்சாரம் தாக்கி பலி

ஒரத்தநாடு அருகே வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி மின்சாரம் தாக்கி பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி இறந்த ஜெயராமன்
மின்சாரம் தாக்கி இறந்த ஜெயராமன்
Published on

திருவோணம்:

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா தலையாமங்கலம் கிராமம் புது தெருவை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 51). இன்று அதிகாலை ஜெயராமன் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாய வேலைகளை பார்வையிட்டு விட்டு திரும்பி வந்துள்ளார். அப்போது வயலில் மின்சார வயர் அறுந்து கிடந்துள்ளது. இதனை கவனிக்காமல் அதை மிதித்த ஜெயராமன் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஒரத்தநாடு போலீசார் சம்பவ இடம் சென்று ஜெயராமன் உடலை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இறந்த ஜெயராமனுக்கு குழந்தைகள் இல்லை. அ.ம.மு.க.தலையாமங்கலம் ஊராட்சி செயலாளராக இருந்து வந்தார்.

மேலும் இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, கஜா புயலின் போது இப்பகுதியில் உள்ள மின்சார மரங்கள் பாதி சாய்ந்த நிலையில் உள்ளது. அதில் உள்ள மின்கம்பிகள் அறுந்து விழும் நிலையில் இருப்பதால் பலமுறை ஒரத்தநாடு மின்சார துறைக்கு தகவல் கொடுத்தோம், அதை சரி செய்யாமல் அப்படியே கிடப்பில் போட்டுள்ளனர்.

இதனால் அடிக்கடி இதுபோன்ற விபத்துகள் நடக்கிறது, இனியும் விபத்து ஏதும் நடக்காமல் இருப்பதற்கு மின்சாரத்துறை உடனே கஜா புயலின் போது சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்திவிட்டு புது மின்கம்பம் நட்டு பொதுமக்களின் உயிரை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com