கும்மிடிப்பூண்டி அருகே விவசாயியை உருட்டுக்கட்டையால் தாக்கி நகை, பணம் பறிப்பு

கும்மிடிப்பூண்டி அருகே விவசாயியை உருட்டுக்கட்டையால் தாக்கி நகை, பணம் பறிக்கப்பட்டது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

கும்மிடிப்பூண்டி:

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு அருகே உள்ளது பெரிய புலியூர் கிராமம். இங்கு வசித்து வருபவர் கஜேந்திரன் (வயது 66). விவசாயி. நேற்று முன்தினம் நள்ளிரவில் இவரது வீட்டின் பின்பக்க கதவை உடைக்கும் சத்தம் கேட்டது.

சத்தம் கேட்டு எழுந்த விவசாயி கஜேந்திரனை மர்மநபர்கள் உருட்டுக்கட்டையால் தலையில் தாக்கினர்.

பின்னர் அவரது மனைவி லட்சுமி (60) அணிந்திருந்த 1½ பவுன் தங்க சங்கிலியை கத்தி முனையில் பறித்துச்சென்றனர். இது தவிர வீட்டில் இருந்த ரொக்கப்பணம் ரூ.15 ஆயிரத்தையும் மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.

இந்த சம்பவத்திற்கு முன்னதாக அருகே உள்ள வாசு (65) என்பவரின் வீட்டின் கதவையும் மர்ம நபர்கள் கடப்பாரை கொண்டு உடைத்து இருப்பது தெரியவந்தது. ஆனால் உள்தாழ்பாள் பூட்டை உடைக்க முடியாததால் மர்ம நபர்கள் தங்களது திருட்டு முயற்சியை கைவிட்டது தெரிய வந்துள்ளது.

மர்ம நபர்கள் தாக்கியதில் தலையில் பலத்த காயம் அடைந்த கஜேந்திரன் சிகிச்சைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த துணிகர திருட்டு சம்பவத்தில் திட்டமிட்டு 4 பேருக்கும் மேலான மர்ம நபர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.

இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com