ஆங்கில புத்தாண்டு -வழிபாட்டு தலங்களில் குவிந்த மக்கள்

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் பல்வேறு வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
மும்பை சித்திவிநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளிக்கும் மூலவர்
மும்பை சித்திவிநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளிக்கும் மூலவர்
Published on

சென்னை:

ஆங்கிலப் புத்தாண்டு ‘2021’ஐ வரவேற்கும் விதமாக உலகம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன. இதனால் மக்கள் தங்கள் வசிக்கும் பகுதிகளிலேயே புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடினர். 

நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததும், வாணவேடிக்கைகள், இசை நிகழ்ச்சிகள், விருந்து நிகழ்ச்சிகள் என பல்வேறு விதங்களில் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர். ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர்.

தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டதால் சென்னை மெரினா கடற்கரை உள்ளிட்ட பல்வேறு கடற்கரைகள் மற்றும் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. புதுச்சேரியில் கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றன. 

புத்தாண்டு சிறப்பாக அமைய வேண்டி நாடு முழுவதும் கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் பல்வேறு வழிபாட்டுத் தலங்களில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. வழிபாட்டு தலங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கடவுளின் அருளாசியை பெறுவதற்காக வழிபாட்டுத் தலங்களில் மக்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். புதிய வருடத்தின் முதல் நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதன் மூலம், ஆண்டு முழுவதும் வெற்றிகரமாகவும், மகிழ்ச்சியாகவும் அமையும் என்ற நம்பிக்கை நிலவி வருகிறது. இதனால் ஆண்டு முழுவதும் மகிழ்ச்சி நீடிக்க வேண்டும் என இறைவனை வேண்டி மக்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள பொற்கோவில் மற்றும் மும்பை சித்திவிநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அதிகாலையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக குவிந்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com