யானைகள் முகாம்- இந்துசமய அறநிலைய துறை அதிகாரிகள், ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை

மேட்டுப்பாளையம் யானைகள் முகாமில் பங்கேற்க உள்ள இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட 50 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
யானைகள் நலவாழ்வு முகாமில் மின்சாதன பெட்டிகள் அமைக்கப்பட்டு வரும் காட்சி.
யானைகள் நலவாழ்வு முகாமில் மின்சாதன பெட்டிகள் அமைக்கப்பட்டு வரும் காட்சி.
Published on

மேட்டுப்பாளையம்:

கோவை மாவட்டம் தேக்கம்பட்டி வன பத்ர காளியம்மன் கோவில் பவானி ஆற்றுப்படுகையில் ஆண்டு தோறும் யானைகள் நலவாழ்வு முகாம் நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான நலவாழ்வு முகாம் நாளை மறுநாள்(திங்கட்கிழமை) தொடங்குகிறது. இந்த யானைகள் முகாமில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களை சேர்ந்த கோவில் யானைகள் கலந்து கொள்ள உள்ளன.

யானைகள் முகாமில் அலுவலகம், பாகன்கள் தங்குமிடம், பாகன்கள் ஓய்வறை, பாகன்கள் மற்றும் யானைகளுக்கான கொட்டகைகள், யானைகள் நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை, யானைகள் குளிக்க சவர் மேடை உள்ளிட்டவை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

முகாமில் பங்கேற்கும் யானைகள் அனைத்தும் நாளை மதியம் 2 மணிக்குள் வர அந்தந்த கோவில் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து யானைகளும் நாளையே முகாமுக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே முகாமில் பங்கேற்க உள்ள இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட 50 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதன் முடிவுகள் இன்னும் வரவில்லை. அதில் கொரோனா தொற்று இல்லை என வரும் அதிகாரிகள் பங்கேற்று பணியில் ஈடுபடுவார்கள்.

யானைகள் முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது. தொடக்க விழா 8-ந் தேதி நடக்கிறது. இதில் உள்ளாட்சித்துறை, அறநிலையத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வனத்துறை அமைச்சர் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

யானைகள் அனைத்தும் நாளைக்குள் வந்துவிடும். கொரோனா கட்டுப்பாடு காரணமாக முகாமில் பங்கேற்கும் யானைகளின் எண்ணிக்கை விவரம் யானைகள் வந்த பின்பு தான் தெரியும்.

கோவை அடுத்த பேரூரில் பழமையான பட்டீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு 29 வயதான கல்யாணி யானை உள்ளது. இந்த யானை மேட்டுப்பாளையத்தில் நடக்கும் யானைகள் முகாமில் பங்கேற்க உள்ளது.

இதற்காக அந்த யானைக்கு பேரூர் கால்நடை மருத்துவர் மகாலிங்கம் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். மேலும் கல்யாணி யானைக்கு ஆந்த்ராஸ், கோமாரி தடுப்பூசியும் போடப்பட்டது.

இதில் கல்யாணியின் உடல் ஆரோக்கியமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கல்யாணி யானை ஆரோக்கியமாக உள்ளதாக கால்நடை மருத்துவர் சான்றிதழ் வழங்கினார். நாளை உதவி ஆணையர் விமலா தலைமையில் கல்யாணி யானைக்கு கோ பூஜை செய்யப்பட்டு மேட்டுப்பாளையம் யானைகள் முகாமுக்கு அனுப்பப்பட உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com