குமரியில் சிப்பி மீன்கள் சீசன் தொடங்கியது

குமரியில் ‘சிப்பி‘ மீன்கள் சீசன் தொடங்கியது. போதிய விலை கிடைக்காததால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
குளச்சலில் பிடித்து வரப்பட்டுள்ள சிப்பி மீன்களை காணலாம்
குளச்சலில் பிடித்து வரப்பட்டுள்ள சிப்பி மீன்களை காணலாம்
Published on

குளச்சல்:

குமரி மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வள்ளங்களும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. கணவாய், இறால், கேரை, சுறா, நெய் மீன், சூரை மற்றும் நெத்திலி, சாளை, வெளமீன் போன்ற மீன்கள் பிடிக்கப்படுகிறது. இந்த மீன் வகைகள் தவிர ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் தோடு எனப்படும் ‘சிப்பி‘ மீன்கள் பிடிக்கப்படுகிறது. முத்து குளிக்கும் மற்றும் மூச்சு பயிற்சி பெற்ற மீனவர்கள் கடல் பாறை பகுதிகளில் நீருக்கு அடியில் சென்று பாறையில் ஒட்டியிருக்கும் சிப்பி மீன்களை பிடித்து வருவார்கள்.

குமரி மாவட்டத்தில் குளச்சல், கடியபட்டணம், வாணியக்குடி, குறும்பனை, இனயம், மேல்மிடாலம் ஆகிய கடலோர கிராமங்களில் மீனவர்கள் ‘சிப்பி‘ மீன்கள் எடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். குளச்சலில் ‘சிப்பி‘ மீன்கள் சீசன் நேற்று முன்தினம் தொடங்கியது. குளச்சலை சேர்ந்த 50 மீனவர்கள் ‘சிப்பி‘ மீன் எடுக்கும் தொழிலில் ஈடுபட்டனர்.

நேற்று கரைக்கு எடுத்து வரப்பட்ட 500 எண்ணிக்கை கொண்ட ஒரு கச்சா சிப்பி மீன் ரூ.1,800-க்கு விலை போனது. போதிய விலை கிடைக்காததால் மீனவர்கள் கவலை அடைந்தனர். இந்த சிப்பி மீன்களுக்கு கேரளா ஓட்டல் மற்றும் மதுபான பார்களில் பெரும் மவுசு உள்ளதால் கேரள வியாபாரிகள் வந்து வாங்கி செல்வர். ஆனால் இந்த வருடம் கேரள வியாபாரிகள் வராததால் விலை குறைந்துள்ளது.

இதுகுறித்து சிப்பி மீன் தொழிலாளர்கள் கூறுகையில், இந்த வருடம் பாறையின் அடிப்பகுதியில் சிப்பி மீன்கள் குறைவாக உள்ளது. இதனால் போதிய மீன்கள் கிடைக்கவில்லை. இது ஒருபுறமிருக்க கேரள வியாபாரிகளின் வரத்தும் குறைவாக உள்ளது. எனவே இந்த வருடம் சிப்பி மீன் சீசன் மீனவர்களுக்கு கை கொடுக்குமா? என்பது கேள்வி குறியாக உள்ளது என்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com