

நாமக்கல்:
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கூரா கண்டு பகுதியில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரே நேரத்தில் 300-க்கும் அதிகமான கோழிகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் பறவை காய்ச்சல் காரணமாக கோழிகள் இறந்தது தெரியவந்தது.
இதையடுத்து கோழிகள் இறந்த பண்ணையில் இருந்து 10 கிலோ மீட்டர் சுற்றளவில் அனைத்து கோழிப்பண்ணைகளையும் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவித்து கோழிக்கோடு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே கேரளாவில் ஏற்பட்டுள்ள பறவை காய்ச்சல் காரணமாக தமிழக கோழிப்பண்ணையாளர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் 1000-க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இங்கு நாள் தோறும் 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் நாள்தோறும் 1 கோடி முட்டை மற்றும் இறைச்சி கோழிகள் கேரள மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது கேரளாவில் பறவை காய்ச்சல் காரணமாக நாமக்கல் பகுதிகளில் உள்ள பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோழிப்பண்ணைகளில் கிருமி நாசினி தெளிக்கப்படுவதுடன் பண்ணைகளுக்குள் வரும் வாகனங்கள்மீது நோய் தடுப்பு மருந்து தெளிக்கப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகிறது. மேலும் கோழிப் பண்ணைகளில் உயர் பாதுகாப்பு முறைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆனாலும் பறவை காய்ச்சல் பீதியால் நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை குறைந்துள்ளது. உயிருடன் ஒரு கிலோ கறிக்கோழி 137 ரூபாய்க்கு நேற்று விற்கப்பட்ட நிலையில் இன்று 17 ரூபாய் சரிந்து 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மேலும் இனி வரும் நாட்களில் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் நாமக்கல் மண்டலத்தில் நேற்று 5.15 ரூபாயாக இருந்த முட்டை விலை இன்று 15 காசுகள் குறைந்து 5 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.