தொழிலாளிக்கு கத்திக்குத்து - 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு

ஸ்பிக்நகர் அருகே தொழிலாளியை கத்தியால் குத்திய சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி அத்திமரப்பட்டி, மேலத்தெருவைச் சேர்ந்தவர் ஜெகன் (வயது 45). கூலி தொழிலாளி. இவரது வீட்டின் அருகே அவரது தம்பி கணேஷ்குமாரும், குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

அதே பகுதியைச் சேர்ந்த அர்ச்சனா என்பவரது மகன் செல்வா மற்றும் அவரது நண்பர்கள் ஜெகன் வீட்டின் அருகில் செல்போன் வைத்து விளையாடிக்கொண்டு அதிக சத்தம் எழுப்பி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஜெகனும், அவரது தம்பி கணேஷ்குமாரும் செல்வா மற்றும் அவரது நண்பர்களை கண்டித்துள்ளனர். அதிலிருந்து அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜெகன் அத்திமரப்பட்டி மேலத்தெரு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த செல்வா மற்றும் அவரது நண்பர் சேர்மத்துரை ஆகியோர் ஜெகனை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். திடீரென்று செல்வா கத்தியால் ஜெகனை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த ஜெகன் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்வா மற்றும் சேர்மத்துரையை வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com