வேலூரில் குடிபோதையில் மகனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற ராணுவ வீரர்

குடிபோதையில் பெற்ற மகனை தந்தையே சுட்டுக்கொன்ற சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

வேலூர்:

வேலூர் அடுக்கம்பாறை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது50). ஓய்வுபெற்ற ராணுவ வீரர். தற்போது இவர் இரவு நேர காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

சுப்பிரமணி நேற்று இரவு குடித்துவிட்டு வந்து தனது மகளை திட்டினார். இதனை இளையமகன் வினோத் (25) தட்டிகேட்டார். அப்போது தந்தை, மகன் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த சுப்பிரமணி தான் வீட்டில் வைத்திருந்த இரட்டை குழல் துப்பாக்கியை எடுத்து வந்து வினோத்தை சுட்டார். இதில் குண்டு பாய்ந்து வினோத் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு அந்த பகுதி மக்கள் ஓடிவந்தனர். அங்கு பிணமாக கிடக்கும் வினோத் உடலை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

பொதுமக்கள் அங்கு வருவதை அறிந்த சுப்பிரமணி அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார். இதுபற்றி தகவல் அறிந்த வேலூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வினோத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக இருந்த சுப்பிரமணியை தேடி வந்தனர்.

இந்நிலையில் சுப்பிரமணி அடுக்கம்பாறை பகுதியில் சுற்றி திரிந்த போது ரோந்து பணியில் இருந்த போலீசார் அவரை கைது செய்தனர். இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடிபோதையில் பெற்ற மகனை தந்தையே சுட்டுக்கொன்ற சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com