

சென்னை:
சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்த ஊரடங்கு நாட்களில் பொதுமக்களின் நடமாட்டம் குறைவாக இருப்பதாலும், போக்குவரத்து இடையூறு இல்லாத காரணத்தினாலும், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் குப்பைகள் மற்றும் கட்டிடக் கழிவுகளை அகற்றி சென்னையை தூய்மையாக பராமரிக்கும் வகையில் தீவிர தூய்மைப் பணி திட்டம் கடந்த 27-ந்தேதி அன்று தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
தூய்மைப்படுத்தும் பணிகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகள், சாலைகள் மற்றும் தெருக்களில் நீண்ட நாட்களாக தேங்கிக் கிடக்கும் குப்பைகள் மற்றும் கட்டிடக் கழிவுகள் உள்ள பகுதிகள் மண்டல வாரியாக கண்டறியப்பட்டு தூய்மை பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
15 மண்டலங்களிலும் சராசரியாக 400-க்கும் மேற்பட்ட சாலைப் பணியாளர்கள், 1500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், 400-க்கும் மேற்பட்ட ஜே.சி.பி., காம்பாக்டர், டிப்பர் லாரிகள், பேட்டரியால் இயங்கும் சிறிய வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வண்டிகள் தூய்மை பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. தீவிர தூய்மை பணி தொடங்கப்பட்ட 27-ந்தேதி முதல் இதுநாள்வரை 989 இடங்களில் 1894 மெட்ரிக் டன் குப்பைகளும், 5511 மெட்ரிக் டன் கட்டிட கழிவுகளும் என மொத்தம் 7405 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.