

கும்மிடிப்பூண்டி:
புதுகும்மிடிப்பூண்டி கரும்புக்குப்பம் பகுதியில் அங்காளம்மன் கோவில் உள்ளது. இதன் அருகிலேயே கோவில் குளமும் உள்ளது. இதில் அதிகளவு தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.
இந்தநிலையில் இன்று காலை அதே பகுதியை சேர்ந்த சுமதி (வயது 35), அவரது மகள் அஸ்விதா (14) ஆகியோர் கோவில் குளத்தில் துணி துவைப்பதற்காக சென்றனர்.
அங்கு ஏற்கனவே அப்பகுதியை சேர்ந்த சுகந்தி (38), ஜீவிதா (14), நர்மதா (10) ஆகியோர் துணி துவைத்துக் கொண்டு இருந்தனர். அப்போது சிறுமிகள் அஸ்விதா, ஜீவிதா, நர்மதா ஆகியோர் தண்ணீரில் குளித்ததாக தெரிகிறது.
திடீரென சிறுமி நர்மதா ஆழமான பகுதிக்கு சென்றார். இதில் அவர் தண்ணீரில் மூழ்கினார். உடனே சிறுமிகள் அஸ்விதா, ஜீவிதா ஆகியோர் அவரை மீட்க முயன்றனர். இதில் அவர்களும் அந்த தண்ணீரில் சிக்கிக் கொண்டனர்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சுமதி, சுகந்தி ஆகியோர் தண்ணீரில் மூழ்கிய 3 சிறுமிகளையும் மீட்க சென்றனர்.
அவர்களும் அடுத்தடுத்து தண்ணீரில் சிக்கி மூழ்கினார்கள். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை கண்ட குளத்தின் அருகே இருந்த கிராம மக்கள் கூச்சலிட்டனர். உடனடியாக ஏராளமானோர் திரண்டு வந்து தண்ணீரில் மூழ்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
நீண்ட போராட்டத்துக்கு பின்னர் சுமதி அவரது மகள் அஸ்விதா, ஜீவிதா, சுகந்தி, நர்மதா ஆகிய 5 பேரும் பிணமாக மீட்கப்பட்டனர். இதனைக் கண்டு அவர்களது உறவினர்களும், கிராம மக்களும் கதறி அழுதனர்.
தகவல் அறிந்ததும் கும்மிடிப்பூண்டி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பலியான 5 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
5 பேரை பலி வாங்கிய கோவில் குளம் ஆழமான பகுதி ஆகும். தண்ணீரில் மூழ்கிய சிறுமிகளை மீட்க முயன்ற போது அனைவரும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் கிராம மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பலியான நர்மதா 6-ம் வகுப்பும், அஸ்விதா, ஜீவிதா ஆகியோர் 8-ம் வகுப்பும் படித்து வந்தனர்.