பரோடாவுக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி அதிர்ச்சி தோல்வி

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் பரோடா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தமிழக அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி கண்டு கால்இறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.
பரோடாவுக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி அதிர்ச்சி தோல்வி
Published on

வதோதரா:

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் பரோடா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தமிழக அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி கண்டு கால்இறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் பங்கேற்றுள்ள 28 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் தமிழ்நாடு-பரோடா (சி பிரிவு) அணிகள் இடையிலான கடைசி லீக் ஆட்டம் குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதராவில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே பரோடா 309 ரன்னும், தமிழக அணி 274 ரன்னும் எடுத்தன.

35 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய பரோடா அணி 197 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதைத்தொடர்ந்து 233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய தமிழக அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 2 ரன்கள் எடுத்து இருந்தது.

நேற்று 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. பரோடா அணி வீரர்களின் அபார பந்து வீச்சில் தமிழக அணி விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. கேப்டன் அபினவ் முகுந்த் 1 ரன்னிலும், ஜெகதீசன் 8 ரன்னிலும், பாபா இந்த்ராஜித் ரன் எதுவும் எடுக்காமலும், கவுசிக் காந்தி 12 ரன்னிலும், முகமது ரன் எதுவும் எடுக்காமலும், வாஷிங்டன் சுந்தர் 18 ரன்னிலும், கவுசிக் ரன் எதுவும் எடுக்காமலும், யோமகேஷ் 18 ரன்னும், சாய்கிஷோர் ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து நடையை கட்டினார்கள்.

நிலைத்து நின்று ஆடிய பாபா அபராஜித் 175 பந்துகளில் 7 பவுண்டரியுடன் 60 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். முடிவில் தமிழக அணி 2-வது இன்னிங்சில் 65.1 ஓவர்களில் 130 ரன்னில் சுருண்டது. இதனால் பரோடா அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பரோடா அணி தரப்பில் மெரிவாலா, ஸ்வப்னில்சிங் தலா 4 விக்கெட்டும், அதித் ஷேத் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

லீக் ஆட்டங்கள் முடிவில் ‘ஏ’ பிரிவில் கர்நாடக அணி 32 புள்ளிகளுடன் (6 ஆட்டத்தில் 4 வெற்றி, 2 டிரா) முதலிடத்தையும், டெல்லி அணி 27 புள்ளிகளுடன் (3 வெற்றி, 3 டிரா) 2-வது இடத்தையும், ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியனான குஜராத் அணி 34 புள்ளிகளுடன் (5 வெற்றி, ஒரு டிரா) முதலிடத்தையும், கேரளா அணி 31 புள்ளிகளுடன் (5 வெற்றி, ஒரு தோல்வி) 2-வது இடத்தையும், ‘சி’ பிரிவில் மத்தியபிரதேச அணி 21 புள்ளிகளுடன் (3 வெற்றி, ஒரு தோல்வி, 2 டிரா) முதலிடத்தையும், மும்பை அணி 21 புள்ளிகளுடன் (2 வெற்றி, 4 டிரா) 2-வது இடத்தையும், ‘டி’ பிரிவில் விதர்பா அணி 31 புள்ளிகளுடன் (4 வெற்றி, 2 டிரா) முதலிடத்தையும், பெங்கால் அணி 23 புள்ளிகளுடன் (2 வெற்றி, ஒரு தோல்வி, 3 டிரா) 2-வது இடத்தையும் பிடித்து கால்இறுதிக்கு முன்னேறின.

‘சி’ பிரிவில் இடம் பிடித்து இருந்த தமிழக அணி ஒரு வெற்றி கூட பெறவில்லை. 5 டிரா, ஒரு தோல்வி கண்ட தமிழக அணி 11 புள்ளிகளுடன் தனது பிரிவில் 5-வது இடம் பெற்று கால்இறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.

கால்இறுதி ஆட்டங்கள் டிசம்பர் 7-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை நடக்கிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com