தாம்பரத்தில் தலையில் அம்மிக்கல்லை போட்டு மகனை கொன்ற தந்தை

மது குடித்து ரகளையில் ஈடுபட்ட மகனை தலையில் கல்லைப்போட்டு தந்தையே கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொலை
கொலை
Published on

வேளச்சேரி:

கிழக்கு தாம்பரம், அனந்தபுரம் ஆறுமுகனார் தெருவில் வசித்து வருபவர் உதயகுமார். டெய்லர். இவரது மகன் மணிகண்டன் (வயது 24). மோட்டார் சைக்கிள் மெக்கானிக்.

மணி கண்டனுக்கு குடிப்பழக்கம் உண்டு. அவர் தினந்தோறும் மது குடித்து வந்து வீட்டில் உள்ளவர்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.

இதனை தந்தை உதயகுமார் கண்டித்தும் கேட்கவில்லை. இதுதொடர்பாக தந்தை- மகனுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று இரவும் மணிகண்டன் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். இதனை கண்டித்த தந்தையுடன் மோதலில் ஈடுபட்டார். பின்னர் மணிகண்டன் வீட்டில் உள்ள அறையில் தூங்க சென்று விட்டார்.

தினந்தோறும் மகன் மதுகுடித்து வந்து ரகளையில் ஈடுபடுவது உதயகுமாருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து மகனை கொலை செய்ய முடிவு செய்தார்.

நள்ளிரவு ஒரு மணியளவில் எழுந்த உதயகுமார் வீட்டில் இருந்த அம்மிக்கல்லை தூக்கி மகன் மணிகண்டனின் தலையில் போட்டார்.

இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே மணிகண்டன் பலியானார். சத்தம் கேட்டு அருகில் உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்த மணி கணிடனின் தாய் மற்றும் தம்பி அருண் ஆகியோர் எழுந்தனர். அவர்கள் மணிகண்டன் கொலையுண்டு கிடப்பதை கண்டு கூச்சலிட்டனர்.

இதுகுறித்து சேலையூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து மணிகண்டனின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து உதயகுமாரை கைது செய்தனர். கொலையுண்ட மணிகண்டன் மீது சேலையூர் போலீஸ் நிலையத்தில் வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com