

புதுடெல்லி:
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணையை 30-ந் தேதிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட 4 மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளன. இந்த மனுக்கள் மீதான இறுதி விசாரணை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.
இதில் கர்நாடகா மற்றும் கேரள அரசு தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், தமிழக அரசின் இறுதிவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று 8-வது நாளாக தமிழக அரசின் வாதம் தொடருவதாக இருந்தது. இதற்காக தமிழக அரசு சார்பில் மூத்த வக்கீல்கள் சேகர் நாப்டே, ராகேஷ் திவிவேதி, வக்கீல்கள் ஜி.உமாபதி, சி.பரமசிவம் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.
ஆனால் நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் வேறு பல வழக்குகளின் விசாரணை தொடர்ந்து நடைபெற்றதால் மதியம் 3.30 மணிக்கு பிறகுதான் காவிரி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கோர்ட்டு பணிகள் முடிவடைவதற்கான நேரம் நெருங்கியதாலும், இந்த வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டியதாலும் காவிரி வழக்கின் இறுதி விசாரணையை 30-ந் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹரின் பதவிக்காலம் நிறைவடைவதால், நீதிபதி தீபக் மிஸ்ரா புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார். எனவே 30-ந் தேதி இந்த வழக்கை அவர், தலைமை நீதிபதியாக விசாரிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.