ஐ.ஐ.டி. மாணவர் சேர்க்கைக்கு சுப்ரீம்கோர்ட் அனுமதி: இடைக்கால தடை நீக்கம்

நாடு முழுவதும் ஐ.ஐ.டி. மாணவர் சேர்க்கை மற்றும் கவுன்சிலிங்குக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டது.
ஐ.ஐ.டி. மாணவர் சேர்க்கைக்கு சுப்ரீம்கோர்ட் அனுமதி: இடைக்கால தடை நீக்கம்
Published on

புதுடெல்லி:

ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வு தகுதிப்பட்டியலை ரத்துசெய்து, கலந்தாய்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வேலூரை சேர்ந்த மாணவர் விஷ்ணு பலராம் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் விகாஸ் சிங் மற்றும் சென்னை வக்கீல் தங்கசிவன் ஆகியோர் ஆஜரானார்கள். மனுதாரர் தரப்பில் வக்கீல்கள், ’2017-ம் ஆண்டுக்கான ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வில் இந்தி கேள்வித்தாளில் மட்டும் 2 வினாக்கள் தவறாக இருந்தன. ஆங்கில கேள்வித்தாளில் அனைத்தும் சரியாக இருந்தன. இந்தி மொழியில் தவறாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சலுகை மதிப்பெண் வழங்குவதற்கு பதிலாக, அனைத்து மாணவர்களுக்கும் சலுகை மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வை சரியாக எழுதிய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்று கூறினார்கள்.

இதற்கு மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், இதில் யார், யார் இந்தியில் தேர்வு எழுதினார்கள் என்று அடையாளம் காண்பது கடினமானது என்றார்.

மனுதாரர் வக்கீல்கள், ’இதற்கு ஒரே தீர்வு அனைத்து விடைத்தாள்களையும் மீண்டும் மதிப்பிட வேண்டும். இதில் யார் விடையை முயற்சித்து இருக்கிறார்களோ அவர்களுக்கு சலுகை மதிப்பெண்கள் வழங்கலாம். யார் முயற்சிக்கவில்லையோ அவர்களுக்கு சலுகை மதிப்பெண் தரவேண்டாம். மறுமதிப்பீடு செய்து தகுதிப்பட்டியல் வெளியிடுவது மட்டுமே சரியான தீர்வாக இருக்கும். தற்போது கலந்தாய்வு தான் முடிவடைந்துள்ளது. மாணவர் சேர்க்கை தொடங்கவில்லை’ என்றனர்.

வாதங்களை கேட்ட நீதிபதிகள், வழக்கு திங்கட்கிழமைக்கு(இன்று) ஒத்திவைத்தனர். மேலும் ’விசாரணை முடிந்து உத்தரவு வரும்வரை கலந்தாய்வு எதுவும் நடைபெறக்கூடாது. மாணவர் சேர்க்கையையும் நிறுத்திவைக்க வேண்டும். திங்கட்கிழமை வரை ஐ.ஐ.டி. சேர்க்கை தொடர்பான எந்த வழக்கையும் எந்த ஐகோர்ட்டும் விசாரிக்கக்கூடாது. இந்த உத்தரவை அனைத்து ஐகோர்ட்டுகளின் பதிவாளர்களுக்கும் அனுப்ப வேண்டும்’ என்று உத்தரவிட்டனர். 

இந்நிலையில், நாடு முழுவதும் ஐ.ஐ.டி. மாணவர் சேர்க்கை மற்றும் கவுன்சிலிங்குக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி, சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டது. மத்திய அரசின் விளக்கத்தை ஏற்று சுப்ரீம்கோர்ட்டு இந்த உத்தரவை பிறப்பித்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com