தனி மனித ரகசிய காப்புரிமை, அடிப்படை உரிமையே: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தனி மனித ரகசிய காப்புரிமை அடிப்படை உரிமையே என்று உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது. இந்த தீர்ப்பு ஆதார் வழக்கில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தனி மனித ரகசிய காப்புரிமை, அடிப்படை உரிமையே: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Published on

புதுடெல்லி:

ஆதார் அடையாள அட்டை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினரும் வழக்கு தொடுத்தனர். அதில், ‘அரசியல் சாசனத்தின்படி ஒருவரின் அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமையா?’ என்ற கேள்வி எழுந்தது.

இந்த கேள்வி குறித்து விசாரித்து முடிவு செய்வதற்கு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையில் அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது. இந்த அமர்வில் நீதிபதிகள் ரோஹிண்டன் பாலி நாரிமன், சஞ்சய் கிஷன் கவுல், அபய் மனோகர் சப்ரே, சந்திரசூட், அப்துல் நசீர், எஸ்.ஏ.பாப்டே, ஆர்.கே.அகர்வால், ஜே.செல்லமேஸ்வர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த அமர்வின் முன் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மூத்த வக்கீல்கள் அரவிந்த் தட்டார், கபில் சிபல், கோபால் சுப்பிரமணியம், சியாம் திவான், ஆனந்த் குரோவர், சி.ஏ.சுந்தரம், ராகேஷ் திவிவேதி உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர். நீதிபதிகள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர்கள் பதிலும் அளித்தனர்.

இந்த விசாரணையின்போது, கரக் சிங் மற்றும் எம்.பி. சர்மா வழக்குகளில் ஏற்கனவே அளிக்கப்பட்ட தீர்ப்பு ஆராயப்பட்டது. விசாரணை முடிந்து கடந்த 2-ந் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் இந்த தீர்ப்பு ஆகஸ்ட் 24-ம் தேதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், தனி மனித ரகசிய காப்புரிமை அடிப்படை உரிமையே என்று உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது. இந்த தீர்ப்பு ஆதார் வழக்கில் தாக்கத்தை ஏற்படுத்தும்  என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

இந்த தீர்ப்பு இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com