

வேலூர்:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட, பேரறிவாளன் கடந்த 26 ஆண்டுகளாக வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்.
பேரறிவாளன், தனது தந்தை ஞானசேகரன் என்கிற குயில் தாசனுக்கு உடல் நலம் சரியில்லாததால் பரோலில் விடுவிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார்.
இந்நிலையில், கடந்த மாதம் 24-ந் தேதி இரவு பேரறிவாளன் 30 நாள், பரோலில் விடுதலையானார். பேரறிவாளனுக்கு ‘எஸ்காட்’ போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜோலார்பேட்டை அருகே பழைய ஜோலார்பேட்டை கே.கே.சி.தங்கவேல் தெருவில் உள்ள தனது வீட்டில் பேரறிவாளன் தங்கி உள்ளார்.
இந்த நிலையில், பரோலில் வெளிவந்த 15 நாட்களில் (நேற்று வரை) பேரறிவாளன், நண்பர்கள், உறவினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் என 1000-க்கும் மேற்பட்டோரை சந்தித்து பேசியுள்ளார்.
பரோல் முடிய இன்னும் 14 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்த நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவனையில் இருந்து டாக்டர் தியாகராஜன், இன்று ஜோலார்பேட்டைக்கு வந்து பேரறிவாளனுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார்.
பேரறிவாளனுக்கு சிறுநீரக தொற்று பிரச்சினை இருப்பதால், வேலூர் ஜெயிலில் இருந்தபோது, அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரி மற்றும் சென்னை ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
இதன் தொடர்ச்சியாகவே மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.