

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் கடந்த 1993-ம் ஆண்டு அக்டோபர் 16-ந்தேதி முதல் அதிபராக பதவி வகித்தவர், ஓமர் அல் பஷீர்(75).
கடந்த டிசம்பர் மாதம் முதல் விலைவாசி உயர்வால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். ஓமர் அல் பஷீர் பதவி விலக வலியுறுத்தி அங்கு போராட்டங்கள் நடந்தன.
பின்னர் உள்நாட்டுப் போராக வெடித்த இந்த போராட்டங்களின்போது ஓமர் அல் பஷீர் போர் குற்றங்களில் ஈடுபட்டதாக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு பதிவாகியுள்ளது.
இதற்கிடையில், சற்றும் எதிர்பாராத திருப்பமாக அந்நாட்டின் ராணுவ மந்திரி அவாத் இப்ன் அவுப், கடந்த ஏப்ரல் மாதம் 11-ந்தேதி ராணுவத்தின் உதவியுடன் ஓமர் அல் பஷீரின் ஆட்சியை கவிழ்த்தார்.
ஆட்சியை விட்டு நீக்கப்பட்ட ஓமர் அல் பஷீர் ரகசிய இடத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக சூடான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுருந்தன.
ஓமர் அல் பஷீர் தனது வீட்டில் இருந்து 69 லட்சம் யூரோக்கள், 3 லட்சத்து 51 ஆயிரத்து 770 அமெரிக்க டாலர்கள் மற்றும் 57 லட்சம் சூடான் பவுண்டுகளை முறைகேடாக பதுக்கி வைத்திருந்தது விசாரணையின்போது தெரியவந்தது.