அவதூறாக பேசிய வீடியோ விவகாரம்: சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 3 பேர் இடமாற்றம்

அவதூறாக பேசிய வீடியோ விவகாரம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 3 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் பிறப்பித்துள்ளார்.
இடமாற்றம்
இடமாற்றம்
Published on

போத்தனூர்:

கோவையை அடுத்த க.க.சாவடி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சரவணன். அதே போலீஸ் நிலையத்தில் முன்பு பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார். இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் குறித்து பெண் போலீசார் முன்னிலையில் சரவணன் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இதை ஒரு போலீஸ்காரர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டார். இது கோவை மாவட்ட போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கூடுதல் சூப்பிரண்டு விஜய் கார்த்திக் ராஜாவுக்கு உத்தரவிடப்பட்டது. அவர் விசாரணை நடத்தி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமாருக்கு அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பேரில் சுல்தான்பேட்டையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த முத்துக்குமார் பில்லூர் அணை போலீஸ் நிலையத்துக்கும், க.க.சாவடி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஷேக்கல்முடி போலீஸ் நிலையத்துக்கும், தலைமை காவலர் முத்துசாமி காடம்பாறை போலீஸ் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் பிறப்பித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com