

பாகூர்:
பாகூர் கன்னியகோவில் அருகே தமிழக பகுதியான கண்டங்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகன் சரண்ராஜ் (வயது 27). இவர் அந்த பகுதியில் போட்டோ ஸ்டூடியோ கடை நடத்தி வந்தார். இவர் தனக்கு கிடைக்கும் வருமானம் அனைத்தையும் பலருக்கு கடன் கொடுத்து இருந்தார்.
அதுபோல் ரூ.1 1/2 லட்சம் வரை கடன் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், கடன் வாங்கியவர்கள் பணத்தை திருப்பி கொடுக்க வில்லை. இதனால் சரண்ராஜ் மனஉளைச்சலில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த சரண்ராஜ் சம்பவத்தன்று கன்னியக்கோவிலில் உள்ள ஒரு மதுக்கடையில் மதுவை வாங்கி அதில் விஷத்தை கலந்து குடித்தார். பின்னர் வீட்டுக்கு செல்ல முயன்ற சரண்ராஜ் வழியிலேயே மயங்கி விழுந்தார்.
தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர் சரண்ராஜை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு சரண்ராஜ் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து சரண்ராஜின் தந்தை ராமகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.