

மாணவி அஸ்வினியை தீர்த்துக்கட்டிய அவரது காதலன் அழகேசன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அஸ்வினி உயிரோடு இருக்கிறாரா? அல்லது செத்துவிட்டாரா? என்ற கேள்வியைத்தான் அழகேசன் போலீசாரிடம் முதலில் எழுப்பினார்.
அஸ்வினி இறந்துவிட்டார் என்ற செய்தியை போலீசார் சொன்னவுடன் அழகேசன் முகத்தை மூடிக்கொண்டு தேம்பி தேம்பி அழுதார். பின்னர், “நானும் இனி உயிரோடு இருக்கமாட்டேன்”, என்று போலீசாரிடம் பேசத் தொடங்கினார்.
அழகேசனின் பேச்சை வாக்குமூலமாக போலீசார் பதிவு செய்தனர். அவர் கூறியதாவது:-
எனக்கு 3 அண்ணன்களும், 2 அக்காள்களும் உள்ளனர். எனது குடும்பம் பெரிய குடும்பம். நான் என்பாட்டுக்கு, அமைதியாக என் வேலையை செய்து வந்தேன். அஸ்வினிதான் என்னிடம் முதலில் காதலைச் சொன்னார். நான் அப்போதே சொன்னேன், உன் அழகு எங்கே? என் அழகு எங்கே? நான் உனக்கு பொருத்தமானவன் அல்ல, என்று கூறினேன்.
என் குடும்பம் வறுமையில் உள்ளது. நான் உங்களை காதலிக்கிறேன். உங்களை திருமணம் செய்து கொண்டு நல்லபடியாக உங்களோடு வாழ்வேன் என்று அஸ்வினி கூறினார்.
எந்த சூழ்நிலையிலும் பிரியமாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்தார். அதன் பிறகுதான் அஸ்வினியை எனது உயிருக்கு உயிராக என் மனதில் கோவில் கட்டி காதல் தெய்வமாக கும்பிட ஆரம்பித்தேன்.
அவர் இல்லாமல் நான் இல்லை, என்ற முடிவுக்கு வந்தேன். அவர் பிளஸ்-2வில் நல்ல மார்க் எடுத்து இருந்தார். இதனால் அவரை மேலும் படிக்க வைத்து, நல்ல உத்தியோகம் வாங்கி கொடுத்து, அவரோடு வாழ ஆசைப்பட்டேன். இதனால் அவரை பணம் செலவழித்து கல்லூரியில் நான்தான் சேர்த்தேன். அவருக்கு நல்ல உடைகள் வாங்கிக்கொடுத்து அழகு பார்த்தேன்.
எனது பெற்றோருக்கு தெரியாமல் என் பெயரில் உள்ள ஒரு வீட்டை அடமானம் வைத்து, ரூ.2 லட்சம் கடன் வாங்கி அஸ்வினிக்காக செலவு செய்தேன். அவள் விருப்பப்பட்ட பொருட்களையெல்லாம் வாங்கிக்கொடுத்தேன்.
இதற்கிடையில் எங்கள் காதலுக்கு அஸ்வினியின் தாயார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதில், எதுவும் பிரச்சினை வந்துவிடக்கூடாது என்பதற்காக அஸ்வினியை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தேன்.
அஸ்வினி தனியாக இருக்கும்போது, அவரது வீட்டிற்கு ஒருநாள் நான் சென்றேன். கையில் தயாராக வாங்கி வைத்திருந்த தாலியை கழுத்தில் கட்டினேன். அவரது நெற்றியில் குங்குமம் வைத்தேன். அஸ்வினியின் வீட்டில் உள்ள சாமி படத்தின் முன்பு வைத்து எங்கள் திருமணம் நடந்தது. ஆனால் இதை அஸ்வினி சற்றும் எதிர்பார்க்கவில்லை. சற்று அதிர்ச்சியடைந்தாலும், பின்னர் எதிர்க்கவில்லை.
நாங்கள் இருவரும் கணவன்- மனைவி போலவே வாழ்ந்தோம். என்னைவிட, நல்ல மாப்பிள்ளை அஸ்வினிக்கு எப்படி கிடைக்க முடியும்? நான் ராணிபோல அஸ்வினியை வைத்து வாழ வைத்திருப்பேன், ஆனால் அவரது தாயார்தான் இந்த பிரச்சினைக்கு முழு பொறுப்பேற்க வேண்டும்.
என்மீது போலீஸ்நிலையத்தில் புகார் கொடுத்து அசிங்கப்படுத்தினார். என்னிடம் இருந்து அஸ்வினியை பிரித்தார். நான் கட்டிய தாலியையும் கழற்றி எறிந்தார். ஒரு நல்ல பெண்ணுக்கு அழகான மாப்பிள்ளை வேண்டும் என்பதைவிட, நல்ல கணவன் அமையவேண்டும் என்பதுதான் முக்கியம். இதை பெற்றோர்கள் பார்ப்பதில்லை.
அஸ்வினியோடு நான் கொண்டிருந்த காதல் வாழ்க்கை அதன்பிறகு இப்போது ஏற்பட்டுள்ள துயர முடிவு எல்லாவற்றுக்கும் நான் பொறுப்பல்ல, இருந்தாலும் என் உயிருக்கு உயிரான அஸ்வினியை என் கையால் தீர்த்துக்கட்டிவிட்டேன், இனிமேல் எனக்கும் இந்த உலக வாழ்க்கை தேவையில்லை. அஸ்வினியை கொன்றுவிட்டு, ஒருவேளை அவர் சாகாவிட்டால் அவர்மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துவிட்டு, நானும் என் தலையில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடுதான் சென்றிருந்தேன். அஸ்வினி மீது மண்எண்ணெயை ஊற்றிவிட்டு, என் மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைக்க முற்பட்டேன். தீயை பற்றவைக்க ‘லைட்டரை’ எடுத்தபோது, அது தவறி கீழே விழுந்துவிட்டது. அதற்குள் பொதுமக்கள் என்னை பிடித்துவிட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.