

கள்ளக்குறிச்சி:
சின்னசேலத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 49). இவருடைய மனைவி அனுராதா(41). இவர்களுடைய மகன்கள் மோகன்ராஜ்(19). அன்புமணி(14). கோவிந்தராஜ் இறந்து விட்டதால், மகன்களை அனுராதா வளர்த்து வந்தார். இந்த நிலையில் அனுராதா மற்றும் அவரது மகன்கள், உறவினர்கள் கள்ளக்குறிச்சி அருகே சித்தலூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றனர். அப்போது மோகன்ராஜ், கோவிலுக்கு அருகில் உள்ள கோமுகி ஆற்றில் தண்ணீர் செல்வதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார். அப்போது கால் தவறி ஆற்றில் மூழ்கினார்.
நீச்சல் தெரியாததால், தண்ணீரில் தத்தளித்து மோகன்ராஜ் மூழ்கினார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் ஆற்றில் இறங்கி, தேடினர். நீண்ட நேர போராட்டத்துக்கு பின்னர் மோகன்ராஜ் பிணமாக மீட்கப்பட்டார். இதற்கிடையே இதுபற்றி அறிந்த வரஞ்சரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மோகன்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோகன்ராஜ், இந்திலியில் உள்ள தனியார் கல்லூரியில் சுகாதார ஆய்வாளர் படிப்பு முதலாம் ஆண்டு படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.