மன்னார்குடி அருகே துக்க வீடு போல சித்தரித்து மதுக்கடைக்கு எதிராக போராட்டம்

மன்னார்குடி அருகே மதுக்கடையை மூடக்கோரி கிராம மக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயியை பிணம்போல் உட்கார வைத்து மதுபாட்டில் மாலை அணிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மன்னார்குடி அருகே துக்க வீடு போல சித்தரித்து மதுக்கடைக்கு எதிராக போராட்டம்
Published on

மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தளிக்கோட்டை கிராமத்தில் உள்ள மதுக்கடையை மூடக்கோரி கடந்த மாதம் 17-ந்தேதி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், 20 நாட்களுக்குள் மதுக்கடையை மூடுவதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். அதிகாரிகள் கூறியபடி 20 நாட்களுக்குள் மதுக்கடை மூடப்படவில்லை. இதையடுத்து தளிக்கோட்டை கிராம மக்கள் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின்போது விவசாயி ஒருவரை பிணம்போல் உட்கார வைத்த கிராம மக்கள், அவருடைய கழுத்தில் மதுபாட்டில்களை மாலையாக தொங்க விட்டனர். இதைத்தொடர்ந்து அவரை சுற்றி இருந்த பெண்கள் ஒப்பாரி வைத்தனர். நூதன முறையில் நடைபெற்ற இந்த போராட்டம் பல மணிநேரம் நீடித்தது. இதில் ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டு, மதுக்கடைக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினர்.

தளிக்கோட்டை கிராம மக்களின் போராட்டம் குறித்து மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும் என கலெக்டரிடம் நேரில் வலியுறுத்தி இருக்கிறேன். தளிக்கோட்டையில் அதிகாரிகள் உறுதி அளித்தபடி மதுக்கடையை மூடவில்லை. மாவட்ட நிர்வாகம் தளிக்கோட்டை கிராமத்தில் உள்ள மதுக்கடையை உடனடியாக மூட வேண்டும். இதுகுறித்து சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com