ஆயுத தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம் 4-வது நாளாக நீடிப்பு- உற்பத்தி கடும் பாதிப்பு

தனியார்மயமாக்கலை எதிர்த்து ஆயுத தொழிற்சாலை ஊழியர்களின் நாடு தழுவிய போராட்டம் இன்று 4 நாளாக தொடர்கிறது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on

ஐதராபாத்:

நாடு முழுவதும் உள்ள ஆயுத தொழிற்சாலைகளை தனியார்மயமாக்குதலை எதிர்த்து தொழிற்சாலையின் ஊழியர்கள் கடந்த 20ம் தேதி நாடு தழுவிய போராட்டத்தை தொடங்கினர். ஒரு மாதம் இந்த போராட்டம் நீடிக்கும் என தெரிவித்திருந்தனர். அவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று 4 வது நாளாக தொடர்கிறது. மொத்தம் 80000 நிரந்தர பணியாளர்களும் 40000 ஒப்பந்த ஊழியர்களும் இப்போராட்டத்தில் பங்கு பெற்றுள்ளனர். 

இந்த வேலைநிறுத்தம் தமிழ்நாடு, தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பீகார், சண்டிகர் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது.

போராட்டம் தொடங்கிய முதல் நாள் 10.40% தொழிலாளர்கள் வேலைக்கு சென்றனர் அடுத்த இரு நாட்களில் முறையே 7.09%, 6.87% தொழிலாளர்கள் மட்டுமே வருகை தந்தனர். இதனால் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆயுத தொழிற்சாலைகள் 218 ஆண்டுகளாக அரசின் கீழ் செயல்பட்டு வருகிறது. ஆனால் தற்போது பாஜக தலைமையிலான அரசு இந்த தொழிற்சாலைகளை தனியார்மயமாக்க தன்னிச்சையாக முடிவு செய்துள்ளது.

இந்த போராட்டத்திற்கு, அகில இந்திய வங்கி ஊழியர் சங்க (AIBEA) பொதுச் செயலாளரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) தேசிய செயற்குழு உறுப்பினருமான சி.வெங்கடச்சாலம் ஆதரவு தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “கடந்த காலங்களிலும் ஆயுத தொழிற்சாலைகளை தனியார்மயமாக்க முயற்சிகள் இருந்தன, மேலும் பல்வேறு குழுக்கள் ஆயுத தொழிற்சாலைகளை  தனியார்மயமாக்க  பரிந்துரைத்தன. எவ்வாறாயினும், இந்த தொழிற்சாலைகள் போர் இருப்பு மற்றும் ஆயுதப் படைகளை மட்டுமே சார்ந்து இருப்பதால் வணிக ரீதியாக சாத்தியமான அல்லது லாபகரமான பிரிவுகளாக செயல்பட முடியாது. இந்த தொழிற்சாலைகள் பாதுகாப்புப் படைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.

அப்போதைய பாதுகாப்பு அமைச்சர்களான ஜார்ஜ் பெர்னாண்டஸ், பிரணாப் முகர்ஜி, ஏ.கே. அந்தோணி, மனோகர் பரிக்கர் ஆகியோர் இந்த பரிந்துரைகளை நிராகரித்தனர். மேலும் இந்த தொழிற்சாலைகள் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் அரசாங்கத்தின் துறைகளாக தொடரும் என்று உறுதியளித்தனர்.

ஆனால்  தேசிய ஜனநாயக் கூட்டணி அரசு தனது 100 நாள் திட்டத்தில் இதை ஒரு நிகழ்ச்சி நிரலாக கொண்டு வந்து, ஆயுத தொழிற்சாலைகளை தனியார்யமாக்க முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com