

கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலம் பகுதியில் கடந்த 12 ஆண்டுகளாக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சுமார் 7 இடங்களில் ஆழ்துளை எண்ணெய் கிணறுகள் அமைத்துள்ளது. இங்கு இருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய் பூமிக்கடியில் குழாய் பதித்து அதன் வழியாக குத்தாலத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்படுகிறது. தற்போது கதிராமங்கலம் பகுதியில் புதிய குழாய்கள் பதிக்கும் பணியை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் செய்து வருகிறது. இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை கதிராமங்கலம் கொடியாலம் சாலையில் உள்ள ஓ.என்.ஜி.சி நிறுவன ஆழ்துளை எண்ணெய் கிணறு அருகே வயல் பகுதியில் செல்லும் குழாய் உடைந்து அதில் இருந்து கச்சா எண்ணெய் வெளியேறியது. இது குறித்து தகவலறிந்த பொதுமக்கள் கச்சா எண்ணெயால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. எனவே இந்தநிறுவனம் உடனடியாக வெளியேற வேண்டும் என்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் கும்பகோணம் உதவி கலெக்டர் பிரதீப்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.ஆனால் பொது மக்கள் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை நிரந்தரமாக வெளியேற்றினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம், மீறி எங்களை அப்புறப்படுத்த நினைத்தால் இதே கச்சா எண்ணெயை தீ வைத்து உடலில் கொளுத்திகொள்வோம் என மிரட்டினர்.
இதைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்களிடம் யாரும் வரக்கூடாது என்பதற்காக சாலையில் முள்செடிகளை நடுவே போட்டு தடுத்து வைத்திருந்தனர். இதற்கிடையில் சாலையில் கிடந்த முள்செடியை மர்ம நபர்கள் கொளுத்திவிட்டதால், அவை தீ பிடித்து எரிந்தது. அதை அணைப்பதற்காக போலீசார் சென்றபோது பொதுமக்கள் போலீசார் மீது கல்வீசி தாக்கினர். இதனால் ஆத்திரமடைந்த போலீசார் பொதுமக்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். அப்போது அதிகாரிகளிடமும், போலீசாரிடமும் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கலெக்டர் கூறியதாவது:-
ஓ.என்.ஜி.சி. நிறுவனம் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. இப்பகுதி மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்களின் பாதுகாப்புக்கு மாவட்ட நிர்வாகம் தகுந்த ஏற்பாடுகளை செய்யும் என்றார்.
இந்த நிலையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டதாக அப்பகுதிகளை சேர்ந்த ஜெயராமன் (வயது 63), விடுதலை சுடர் (46), சந்தோஷ் (30), சாமிநாதன் (30), சிலம்பரசன் (27), தர்மராஜ் (39), செந்தில்குமார் (48), முருகன் (38), ரமேஷ் (38) ஆகிய 9 பேரை பந்தநல்லூர் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது பொது சொத்தை சேதப்படுத்துதல், கொலை முயற்சி, அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல் என்பது உள்பட 12 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து அவர்களை கும்பகோணம் 2-வது கூடுதல் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதிதுறை நடுவர் நீதிமன்ற நீதிபதி வீட்டிற்கு சென்று நீதிபதி முன்பு இன்று காலை ஆஜர்படுத்தினர். கைதான 9 பேரையும் வருகிற 14-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை கண்டித்து கைதான 9 பேரும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை சாப்பிட வைத்து போலீசார் திருச்சி சிறையில் அடைத்தனர்.
மேலும் கதிராமங்கலத்தில் முன்னெச்சரிக்கையாக 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி 9 பேரை கைது செய்துள்ளதை கண்டித்து அப்பகுதி மக்கள் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தபோவதாக அறிவித்துள்ளனர்.
இந்தநிலையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேறக்கோரி கதிராமங்கலத்தில் இன்று வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். மேலும் கும்பகோணத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக தகவல் பரவியதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.