தீபாவளி போனசை உயர்த்தி கேட்டு அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

தீபாவளி போனசை உயர்த்தி தர கோரி அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தீபாவளி போனசை உயர்த்தி கேட்டு அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
Published on

குலசேகரம்:

குமரி மாவட்டத்தில் உள்ள அரசு ரப்பர் கழகத்தில் சுமார் 2500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த ஆண்டு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு 20 சதவீதம் போனஸ் மற்றும் 10 சதவீதம் கருணைத் தொகை என்று 30 சதவீதமாக போனசை உயர்த்தி தர வேண்டும் என்று ரப்பர் தொழிலாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

இதுதொடர்பாக பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டு உள்ளன. இதுதொடர்பாக தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை காரணமாக கடந்த 6-ந் தேதி நடைபெற இருந்த போராட்டம் தள்ளிவைக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் கடந்த 9-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் தொழிலாளர்களின் போனஸ் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். அதில் அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் போனஸ் பற்றி எந்த தகவல்களையும் தொழிலாளர்களிடம் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை என்று தொழிலாளர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இதைத்தொடர்ந்து குலசேகரத்தில் அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் போனஸ் விவரங்களை உடனடியாக அறிவிக்க வேண்டும், தீபாவளிக்கு 20 சதவீத போனஸ், 10 சதவீத கருணை தொகை வழங்க கேட்டு இன்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்படி குமரி மாவட்டத்தில் அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் இன்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். மேலும் நாகர்கோவிலில் அரசு ரப்பர் கழக இயக்குனர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடவும் அவர்கள் முடிவு செய்தனர்.

அதை தொடர்ந்து அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் ஆண்கள், பெண்கள் என்று ஆயிரத்திற்கும் மேற்பட்டவர் கள் இன்று காலை அரசு ரப்பர் கழக அலுவலகத்தில் குவிந்தனர். அவர்கள் அந்த அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போனஸ் தொகையை உயர்த்தி வழங்கக்கோரி அவர்கள் கோ‌ஷங்களையும் எழுப்பினார்கள். இதில் சி.ஐ.டி.யூ. பொதுச்செயலாளர் வல்சலகுமார், முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், தொ.மு.ச. பொதுச்செயலாளர் விஜயன், அன்னை சோனியாகாந்தி காங்கிரஸ் பொதுச்செயலாளர் குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அங்கு வடசேரி போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com