

நாகமலை புதுக்கோட்டை:
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறை தலைவராக பணியாற்றி வருபவர் ஜெனீபா (வயது 45). அதே துறையில் ஆய்வு மாணவராக இருப்பவர் ஜோதி முருகன். இவர் பகுதி நேர பேராசிரியராகவும் உள்ளார். இன்று காலை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அலுவலக அறைக்கு ஜெனீபா நடந்து சென்று கொண்டிருந்தார்.
தமிழ்த்துறை அலுவலகம் வழியாக சென்றபோது எதிரே வந்த ஜோதிமுருகன் எதிரே வந்தார். அவர் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜெனீபாவை சரமாரியாக குத்தினார்.
இதில் நிலைக்குலைந்த பேராசிரியை ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்த மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள் திரண்டு வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பேராசிரியை ஜெனீபாவை மீட்டு மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பேராசிரியை ஜெனீபாவை கத்தியால் குத்திய ஜோதி முருகனையும் மடக்கிப்பிடித்தனர். இது குறித்து பல்கலைக்கழக வளாகத்தில் நேர்முகத் தேர்வுக்காக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து ஜோதிமுருகனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அவர் ஏன் பேராசிரியை ஜெனீபாவை கத்தியால் குத்திக்கொல்ல முயன்றார்? என்பது தெரியவில்லை. ஜோதிமுருகனிடம் நாக மலைபுதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.