தமிழக அரசியல்வாதிகள் சுயலாபத்திற்காக ஈழ தமிழர் பற்றி பேசுகிறார்கள்: இலங்கை எம்.பி. வேதனை

தமிழக அரசியல்வாதிகள் சுயலாபத்திற்காக ஈழ தமிழர் பற்றி பேசுகிறார்கள் என்று எம்.பி. சீனித்தம்பி யோகேஸ்வரன் மதுரையில் இன்று நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழக அரசியல்வாதிகள் சுயலாபத்திற்காக ஈழ தமிழர் பற்றி பேசுகிறார்கள்: இலங்கை எம்.பி. வேதனை
Published on

மதுரை:

இலங்கை மட்டக்களப்பு எம்.பி. சீனித்தம்பி யோகேஸ்வரன் மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக வந்துள்ளேன். ஊர்வலங்களிலும் கலந்து கொண்டேன். மீனவர்கள் பிரச்சினைகள் நீண்ட காலம் நடக்கிறது. அதனை தீர்க்க வேண்டும்.

இரு நாட்டு அரசுகள் பேசினால் மட்டுமே தீர்வு காண முடியும். மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் இலங்கையில் நடைபெற உள்ள மாநாட்டிற்கு செல்லும் போது மீனவர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படும் என்று நம்புகிறோம்.

தமிழ் மக்களுக்காகவும் இலங்கை தமிழர்களுக்கும் ஆதரவளித்தவர் ஜெயலலிதா. அவரது கட்சிதான் ஆட்சியில் உள்ளது. அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை எதிர் பார்க்கிறோம்.

ஜெயலலிதா இருக்கும் போது கட்டுப்பாடுகள் இருந்தது. ஆனால் இப்போது ஒற்றுமையில்லை என்பது வருத்தமளிக்கிறது. யுத்தம் முடிந்து காணாமல் போனவர்கள் குறித்து இலங்கை அரசு எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்க கோரி உள்ளோம்.

பல நாடுகளில் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கக்கோரி உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்கள் நடந்து வருகிறது.

இலங்கையில் தமிழர்களாக உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு குடியுரிமை வழங்க கோரிக்கை வைத்ததால் இப்போது வழங்கப்பட்டிருக்கிறது. அவர்கள் அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் நிலை உள்ளது. அவர்களுக்கு நில உரிமை உள்ளிட்ட பல உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த மக்களை முதன் முதலாக இந்திய பிரதமர் மோடி சென்று பார்த்து உதவிகளை செய்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மூலம் புலிகள் தொடர்பாக சர்வதேச நாடுகளின் தடையை நீக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

ஈழத் தமிழர்களை வைத்து இங்கு தேர்தல் பிரச்சாரங்கள் செய்யப்படுகிறது. ஆனால் இதனால் இலங்கையில் உள்ளவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை. மேலும் இதனை ஈழத் தமிழர்கள் நகைப்புடன் பார்க்கின்றனர்.

தமிழக அரசியல்வாதிகள் தங்களின் சுயலாபத்திற்காக ஈழத்தமிழர்கள் மீது அக்கறை இருப்பதை போல காட்டிக்கொள்வது வேதனைக்குறியது.

ஐ.நா. சபை வரை தமிழக அரசியல்வாதிகள் சிலர் இலங்கையில் தமிழர்களின் நிலை குறித்து எடுத்துச் செல்கின்றனர். ஆனால் ஒரு சிலர் அவ்வாறு செய்யாமல் சுயலாபத்திற்காக செயல்படுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com