ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம்

கச்சத்தீவு அருகே மீன் பிடித்த ராமேசுவரம் மீனவர்களை தாக்கி இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர்.
ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு:  இலங்கை கடற்படை அட்டூழியம்
Published on

ராமேசுவரம்:

ராமேசுவரம், மண்டபம், தங்கச்சிமடம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் இந்திய கடல் எல்லையையொட்டி உள்ள கச்சத்தீவு அருகே இன்று அதிகாலை மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது 4 சிறிய ரோந்து கப்பல்களில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இந்த பகுதியில் மீன்பிடிக்க அனுமதி இல்லை. எனவே இங்கிருந்து செல்லுங்கள் என்று மீனவர்களை எச்சரித்தனர்.

இதையடுத்து மீனவர்கள் அவசர அவசரமாக வேறு பகுதிக்கு செல்ல தயாராகினர். அப்போது இலங்கை கடற்படையினர் ராமேசுவரம், மண்டபம் பகுதிகளை சேர்ந்த மீனவர்களின் படகுகளில் ஏறி அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் மீன்பிடி சாதனங்கள், வலைகள் போன்றவற்றை சேதப்படுத்தி மீனவர்களையும் தாக்கி விரட்டியடித்தனர். இதை யடுத்து மீனவர்கள் உயிருக்கு பயந்து கரை திரும்பினர்.

இலங்கை கடற்படையின் தாக்குதலுக்குள்ளான ராமேசுவரம் மீனவர்கள் கூறுகையில், ஒவ்வொரு முறையும் மீன் பிடிக்க செல்லும்போது ஏதாவது ஒரு பொய்யை கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பதும், தாக்கி விரட்டியடிப்பதும் நடந்து வருகிறது.

கடந்த ஒரு வாரத்தில் 10-க்கும் மேற்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். இன்று காலை நடந்த தாக்குதலால் வெறும் கையோடு கரை திரும்பி உள்ளோம். இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு எட்டும்வரை எங்கள் பிரச்சினை தீராது. தொடர்ந்து இலங்கை கடற் படையினர் தாக்குதல் நடத்தி வருவார்கள் என்று தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com