search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    திறமையான பந்துவீச்சாளர்களை கண்டறியும் திட்டம் அறிமுகம்- அஸ்வின் தொடங்கி வைத்தார்
    X

    திறமையான பந்து வீச்சாளர்களை கண்டறியும் திட்டத்தை தொடங்கி வைத்து அஸ்வின் பேசிய காட்சி.

    திறமையான பந்துவீச்சாளர்களை கண்டறியும் திட்டம் அறிமுகம்- அஸ்வின் தொடங்கி வைத்தார்

    • மிதவேக பந்து வீரர்கள், சுழற்பந்து வீரர்கள் சிறப்பு தேர்வு 13 மாவட்ட மையங்களில் நடைபெறுகிறது.
    • 14 மற்றும் 24 வயதிற்குட்பட்டவர்கள் பங்கேற்கலாம்.

    சென்னை:

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டி.என்.சி.ஏ.) மாநிலம் முழுவதும் இருந்து சுழற்பந்து வீரர்கள் மற்றும் மித வேகப்பந்து வீரர்களை உருவாக்கும் வகையில் புதிய திட்டத்தை உருவாக்கி உள்ளது.

    இதன்படி திறமை மிக்கவர்களை கண்டறியவும், சிறந்த பந்து வீச்சாளர்களை உருவாக்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த திட்டத்தை இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரரான ஆர்.அஸ்வின் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மிதவேக பந்து வீரர்கள், சுழற்பந்து வீரர்கள் சிறப்பு தேர்வு 13 மாவட்ட மையங்களில் நடைபெறுகிறது. 14 மற்றும் 24 வயதிற்குட்பட்டவர்கள் இதில் பங்கேற்கலாம். தேர்வில் பங்கேற்கும் வீரர்கள் 3 ஆண்டுகளில் எந்த வயது பிரிவிலும் ஒருங்கிணைந்த மாவட்ட அணிக்காக ஆடி இருக்க கூடாது.

    சென்னையை தவிர தேனி, திருப்பூர், திருச்சி, மதுரையில் சேட்டி லைட் மையங்கள் உருவாக்கப்படும். இதில் தேனி, திருப்பூர் அதிக செயல் திறன் கொண்டவையாக செயல்படும்.

    ஏற்கனவே உள்ள நெல்லை, நத்தம், சேலம், கோவை, டி.என்.பி.எல். மைதானங்களும் இத்திட்டத்திற்காக பயன்படுத்தப்படும்.

    டி.என்.சி.ஏ. அகாடமி சார்பில் புதிய பந்து வீச்சாளர்களை கண்டறிந்து சிறப்பு பயிற்சி அளித்து உலக தரமிக்கவர்களாக மாற்றுவதே எங்கள் நோக்கமாகும்.

    ஏழ்மை நிலையில் உள்ள இளைஞர்கள் தொடர்ந்து பயிற்சி பெறும் போது அவர்களுக்கு உதவி தொகை வழங்குவது குறித்து பெரும் நிறுவனங்களிடம் பேசப்படும்.

    தமிழக அணி கடைசியாக 1988-ல் ரஞ்சி கோப்பையை வென்றது. அதன் பின்னர் இதுவரை கோப்பையை வெல்லவில்லை. அந்த குறையை போக்க வேண்டும். நானும் இந்த திட்டத்திற்கு என்னால் முடிந்த உதவிகளை கண்டிப்பாக செய்வேன்.

    இவ்வாறு அஸ்வின் கூறினார்.

    பிப்ரவரி 11 முதல் மார்ச் 26 வரை பந்து வீச்சாளர்களை கண்டறியும் தேர்வு நடைபெறுகிறது. டி.என்.சி.ஏ. செயலாளர் ஆர்.ஐ. பழனி, நிர்வாகிகள் ஆர்.என்.பாபா, கே.சிவக்குமார், ஆடம் சேட், சீனிவாச ராஜ், தேர்வு குழு தலைவர் சுப்பையா, பயிற்சியாளர் பிரகாஷ், முன்னாள் மத்திய வீரர் கல்யாண சுந்தரம், கிரிக்கெட் ஆலோசனை குழு தலைவர் கிரீஸ் உள்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    Next Story
    ×