என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

மும்பை அணிக்கு எதிராக தோல்வி அடைந்தது ஏன்?: அக்சர் படேல் விளக்கம்
- 205 ரன்கள் என்பது எட்டக்கூடிய இலக்குதான். ஏனென்றால் இது பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம்.
- எங்கள் அணியின் சுழற் பந்துவீச்சாளர்களை நினைத்து எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்றார்.
புதுடெல்லி:
ஐபிஎல் தொடரில் மும்பைக்கு எதிரான போட்டியில் அடைந்த தோல்விக்கு பிறகு டெல்லி கேப்டன் அக்சர் படேல் கூறியதாவது:
மும்பைக்கு சாதகமாக தான் இந்தப் போட்டி சென்றது. இந்த ஆட்டத்தில் நாங்கள் முழு கட்டுப்பாட்டில் இருந்தோம். நடு ஓவர்களில் நாங்கள் தொடர்ந்து ஆட்டம் இழந்தும், சில தவறான ஷாட்டுகளை ஆடி விக்கெட்டுகளை இழந்து ஒரு ஓவர் எஞ்சியிருக்கும் நிலையில் 12 ரன்கள் வித்தியாசத்தில் நாங்கள் தோற்று இருக்கிறோம்.
இந்தப் போட்டியில் நாங்கள் சரியாக விளையாடி இருந்தால் வெற்றி பெற்று இருக்கலாம். அனைத்துப் போட்டிகளிலும் உங்களுடைய கீழ் வரிசை பேட்ஸ்மேன்கள் வந்து உங்களை காப்பாற்றுவார்கள் என்று நினைக்கக் கூடாது.
205 ரன்கள் என்பது எட்டக்கூடிய இலக்குதான். ஏனென்றால் இது பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம். பனிப்பொழிவும் இருக்கும். ஒருவேளை நாங்கள் சிறப்பாக விளையாடி இருந்தால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று இருக்கலாம்.
எங்கள் அணியின் சுழற் பந்துவீச்சாளர்களை நினைத்து எனக்கு நம்பிக்கை இருக்கிறது. குல்தீப் இந்த சீசனில் சிறப்பாக பந்து வீசி வருகிறார். எனக்கு எப்போதெல்லாம் விக்கெட்டுகள் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் குல்தீப்பிடம் பந்தை கொடுத்தால் போதும்.
இந்தப் போட்டியில் நாங்கள் தோல்வியை தழுவினாலும் எங்களுக்கு நிறைய நல்ல விஷயங்கள் நடந்திருக்கிறது. இந்த போட்டி குறித்து மறந்துவிட்டு அடுத்த போட்டி நோக்கிச் செல்ல வேண்டும் என தெரிவித்தார்.






