

சென்னை:
பெட்ரோல் குண்டுகளை வீசிய நபர் யார்? என்பது பற்றிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எதற்காக இந்த சம்பவம் நடந்தது? என்பது பற்றிய விவரங்கள் எதுவும் தெரியவில்லை.
போலீஸ் நிலையத்தில் உள்ள 3 கேமராக்களில் பதிவான காட்சிகளில் தெளிவு இல்லாததால் குற்றவாளிகளை கண்டு பிடிப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பெட்ரோல் குண்டுகளை வீசியவர்களை பிடிக்க அதிரடி வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.
கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் சாரங்கன் மேற்பார்வையில் குற்றவாளிகள் பற்றி துப்பு துலக்கப்பட்டு வருகிறது. தி.நகர் துணை கமிஷனர் அரவிந்தன் தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
உதவி கமிஷனர்கள் முத்தழகு (தேனாம்பேட்டை), செல்வம் (தி.நகர்), வின்சென்ட் (அசோக்நகர்), இன்ஸ்பெக்டர்கள் கிரி (தேனாம்பேட்டை) சந்த்ரு (வடபழனி), பாஸ்கர் (கே.கே.நகர்), ஆல்பின் (வளசரவாக்கம்) உள்ளிட்ட பலர் தனிப்படையில் இடம் பெற்றுள்ளனர்.
இதற் கிடையே நேற்று மாலையில் போலீஸ் சார்பில் சந்தேக நபர் ஒருவரின் புகைப்படமும் வெளியிடப்பட்டது. அந்த போட்டோவை துண்டு பிரசுரமாக்கி பல இடங்களில் தனிப்படையினர் ஒட்டியுள்ளனர். சந்தேக நபரின் போட்டோவை காட்டி சென்னை மாநகர் முழுவதும் நேற்று இரவு போலீசார் விசாரணை நடத்தினர்.
குடிசைப் பகுதிகளில் அந்த போட்டோவை காட்டி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. போலீஸ் நிலையம் அருகில் உள்ள கட்டிடத்தின் கேமராவில் பதிவான காட்சியை வைத்து சந்தேக நபரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
குற்றவாளியை 2 நாளில் கைது செய்வோம் என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.