தென்மேற்கு பருவமழை இயல்பான அளவு பெய்யும் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்மேற்கு பருவமழை இயல்பான அளவில் பருவமழை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

சென்னை:

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை என்று 2 காலங்களில் மழை பெய்யும். இதில் தென்மேற்கு பருவமழை காலத்தில்தான் பெரும்பாலான மாநிலங்கள் மழையை பெறுகின்றன.

அந்த வகையில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை பெய்யும். சில முறை அக்டோபர் மாதம் வரை கூட பெய்ய வாய்ப்பு இருக்கிறது. பொதுவாக தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கும். கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் மாதம் 8-ந்தேதி சற்று தாமதமாக தொடங்கியது.

தென்மேற்கு பருவமழை காலத்தில் ஒட்டுமொத்த தமிழகத்தில் பெரிய அளவில் மழை இருக்காது என்றாலும், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் நல்ல மழை இருக்கும். அந்த வகையில் தமிழகத்தில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் இயல்பை விட 16 சதவீதம் அதிகமாக மழை பெய்தது.

இந்த நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 1-ந்தேதி தொடங்கும் என்றும், இயல்பான அளவில் பருவமழை இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. மேலும் பருவமழை தொடங்கிய முதல் வாரத்தில் இந்தியாவின் தென் பகுதிகள் முழுவதும் சென்று, பின்னர் இடைவெளிவிட்டு இந்தியா முழுவதும் செல்லும் என்றும் கணிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com