

சென்னை:
சென்னை சர்.பிட்டி தியாகராயநகர் அரங்கில் நெசவாளர்களுக்கு விருது வழங்கும் விழா இன்று நடந்தது. இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு விருதுகள் மற்றும் மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
கேள்வி:- சிறையில் உள்ள சசிகலா, டி.டி.வி.தினகரனை அமைச்சர்கள் ஏன் சந்திக்கவில்லை.
பதில்:- அவர்கள் ஏற்கனவே கட்சியில் இருந்து ஒதுங்கி விட்டதாக சொல்லி இருக்கிறார்கள். அமைச்சர்களுக்கும் நிறைய பணிகள் இருக்கின்றன.
கே:- இரு அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை எந்த நிலையில் உள்ளது.
ப:- பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். ஓ.பி.எஸ்.அணியினர் தயாராக இல்லை. பேச வேண்டும் என்ற உணர்வுடன் முன் வரவேண்டும்.
கே:- இரு அணிகளுக்கு இடையே பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை விழுந்த நிலையில் 3-ம் தரப்பு மூலம் முயற்சி மேற்கொள்ளப்படுமா?
ப:- நீங்கள் சொல்லித்தான் 3-ம் தரப்பு யார்? என்று முயற்சி மேற்கொள்ள வேண்டும். நாங்கள் பேச தயாராக இருக்கிறோம்.
கே:- விரைவில் சட்டசபைக்கு தேர்தல் வரும் என்று ஓ.பி.எஸ். கூறியுள்ளாரே?
ப:- அவர் எப்போது ஜோதிடத்திற்கு மாறினார் என்று தெரியவில்லை. ஓ.பி.எஸ்.-ன் ஜோதிடம் பலிக்காது.
கே:- அமைச்சர் காமராஜ் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதே?
ப:- அரசியல் காரணமாக அமைச்சர் காமராஜ் மீது புகார் கொடுத்துள்ளதாக நான் கேள்விப்பட்டேன். அதன்படி அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கை அவர் சட்டப்படி சந்திப்பார்.
ப:- விரைவில் சட்டசபை கூடும். அப்போது மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும்.
கே:- இந்த அரசு செயல்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் கூறியுள்ளதே?
ப:- முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு 1560 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார். பல்வேறு நலத்திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.