கோப்பு படம்
கோப்பு படம்

அகஸ்தீஸ்வரம் அருகே தந்தையை அரிவாளால் வெட்டிய மகன்

அகஸ்தீஸ்வரம் அருகே வேலைக்கு செல்லாததை கண்டித்ததால் தந்தையை அரிவாளால் வெட்டிய மகனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published on

தென்தாமரைகுளம்:

அகஸ்தீஸ்வரம் அருகில் உள்ள பூஜப்புரைவிளையைச் சேர்ந்தவர் செல்வன் (வயது 58). மீன் வியாபாரம் செய்து வருகிறார்.

இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். முதல் மகனின் திருமணத்தின் போது கடன் ஏற்பட்டுள்ளது. இவரது 2-வது மகன் ஜோனி (28) வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இப்படி இருந்தால் கடனை அடைப்பது எப்படி? என்று செல்வன் ஜோனியை கண்டித்து உள்ளார். சம்பவத்தன்றும் ஜோனி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த போது செல்வன் சத்தம் போட்டுள்ளார்.

இதில் இவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஜோனி அரிவாளை எடுத்து தன்னுடைய தந்தை என்றும் பாராமல் செல்வனை தலையில் வெட்டி காயப்படுத்தியதோடு கொலை மிரட்டலும் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் செல்வனை ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து செல்வன் கொடுத்த புகாரின் பேரில் தென்தாமரைகுளம் சப்-இன்ஸ்பெக்டர் மீனா குமாரி வழக்குப்பதிவு செய்து ஜோனியை தேடி வருகின்றார்.

கொற்றையடியை சேர்ந்தவர் உமர் (40). சமையல் தொழிலாளி.

இவர் தன்னுடைய மோட்டார் சைக்கிளை பொற்றையடி அருகில் உள்ள அரசம்பதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு வேலைக்கு செல்வது வழக்கம். சம்பவத்தன்று இதேபோல அந்த வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றார்.

அப்போது அரசம்பதி பகுதியைச் சேர்ந்த கணேஷ் (28) என்பவர் இங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்தக்கூடாது என்று தகராறு செய்துள்ளார். மேலும் நான் பலமுறை கூறியும் கேட்கமாட்டாயா? என்று வாக்குவாதம் செய்துள்ளார்.

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த கணேஷ், உமரின் தலையில் தாக்கி காயப்படுத்தி விட்டு கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்று விட்டார்.

இதில் காயமடைந்த உமர் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து உமர் கொடுத்த புகாரின் பேரில் தென்தாமரைகுளம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ சேகர் வழக்கு பதிவு செய்து கணேசை தேடி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com