சோலை நகரில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை

சோலை நகரில் செல்போனை பார்த்துக் கொண்டு இருந்ததை பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

புதுச்சேரி:

புதுவை முத்தியால்பேட்டை சோலை நகர் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் ராஜேந்திரன். மீனவர். இவரது மனைவி வனிதா. இவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார்.

இவர்களது மூத்த மகள் சவுமியா (வயது 16). இவர் 10-ம் வகுப்பு படித்து பாதியில் படிப்பை நிறுத்தி விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

இதற்கிடையே சவுமியா வீட்டு வேலை செய்யாமல் எப்போதும் செல்போனை பார்த்தபடியே இருந்து வந்தார். இதனை அவரது பெற்றோர் கண்டித்து வந்தனர்.

அதுபோல் நேற்று முன்தினமும் சவுமியா செல்போனை பார்த்துக் கொண்டு இருந்ததை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் சவுமியா மன வருத்தத்துடன் இருந்து வந்தார்.

நேற்று காலை வழக்கம் போல் ராஜேந்திரன் மீன்பிடி தொழிலுக்கும், வனிதா மீன் வியாபாரத்துக்கும் சென்று விட்டனர்.

வீட்டில் சவுமியா மட்டும் தனியாக இருந்தார். மதியம் 3 மணியளவில் மீன் வியாபாரம் முடிந்து வனிதா வீட்டுக்கு வந்தார். ஆனால், வீட்டில் சவுமியா இல்லை.

இதனால் சந்தேகம் அடைந்த வனிதா வீட்டின் மாடிக்கு சென்று பார்த்த போது அங்கு மின் விசிறியில் சவுமியா துப்பட்டாவால் தூக்கு போட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகளை மீட்டு ஆட்டோவில் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சவுமியா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் சோலைநகர் புறக் காவல் நிலைய சப்- இன்ஸ்பெக்டர் கோவிந்த ராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com