

எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கச்சராயன் ஏரியை தி.மு.க.வினர் தூர்வாரி கரையை பலப்படுத்தினர்.
அதனை கடந்த 27-ந்தேதி தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட இருந்தார். இதற்கிடையே அ.தி.மு.க (அம்மா அணி)விவசாய அணியினர் கடந்த 25-ந்தேதி முதல், கச்சராயன் ஏரியில் மண் அள்ள தாங்கள் முறையான அரசு அனுமதி பெற்று இருப்பதாக கூறி, 50-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரி மற்றும் டிராக்டர்களில் ஏரியிலிருந்து மண் எடுத்து வந்தனர்.
இதனை கண்டித்து போராட்டம் நடத்திய தி.மு.க.வினரும் கைது செய்யப்பட்டனர். மேலும் கடந்த 27-ந் தேதி அந்த ஏரியை பார்வையிட வந்த தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கோவை அருகே தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ஏரியில் மண் அள்ளும் பணி அ.தி.மு.க. (அம்மா அணி) சார்பில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் ஏரியில் மண் அள்ள டிராக்டர்களில் சென்றவர்களை இன்று அந்த பகுதியினர் தடுத்து நிறுத்தினர். மேலும் இந்த ஏரியில் தொடர்ந்து அதிக அளவில் மண் அள்ளுவதால் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து போவதுடன், ஏரியின் இயற்கை அமைப்பும், சீர் குலைந்து போகும் அபாயம் இருப்பதாக கூறினர்.
இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருவதால் அந்த பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.