டயாலிசிஸ் பயம் வேண்டாம்!- டாக்டர் சவுந்தரராஜன்

மருத்துவர்களால் செய்ய முடியாததை ஒரு செவிலியர் செய்து முடித்து விட்டார்.டயாலிசிஸ் நோயாளிகளுக்கும், மற்ற நோயாளிகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.
டயாலிசிஸ் பயம் வேண்டாம்!- டாக்டர் சவுந்தரராஜன்
Published on

தம்பி டயாலிசிஸ் என்று சொன்னவுடன் ஏன் இப்படி பயப்படுகிறாய்? வயிற்றில் செய்யப்படும் பெரமோனியல் டயாலிசிஸ் என்பது ஒன்னுமே இல்லை. நீ காலையில் பல் துலக்கும் போது வாய் கொப்பளிப்பாய் அல்லவா? அதைப்போன்றதுதான்.

ஒரு சிறிய ஊசியை உன் வயிற்றில் போடுவார்கள். உள்ளே இருக்கும் தண்ணீரை வெளியே எடுத்து விடுவார்கள். அவ்வளவுதான்... இதற்கு நீ போய் இவ்வளவு பயப்படலாமா என்று செவிலியர் ஒருவர் சொல்லி கொண்டிருக்க படுக்கையில் இருந்த சிறுவன் வலிக்குமா அக்கா? என்று கேட்க... "அதெல்லாம் வலிக்காதுப்பா, ஊசி போடும் போது உனக்கு வலிக்குமா... லேசா வலிக்கும் அவ்வளவுதான்" என்று அவர் எளிமையாக விளக்கி கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் நானும் அந்த வார்டுக்குள் சென்றேன். எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அந்த சிறுவனை டயாலிசிஸ் செய்வதற்கு இரண்டு, மூன்று நாட்களாக சம்மதிக்க வைப்பதற்கு மிகவும் சிரமப்பட்டுக்கொண்டிருந்தோம். அவன் பயந்து ஒத்துக்கொள்ளாமலேயே இருந்தான். அவனிடம் மிக எளிமையாக அந்த செவிலியர் சொல்லி சம்மதிக்க வைத்தது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. மருத்துவர்களால் செய்ய முடியாததை ஒரு செவிலியர் செய்து முடித்து விட்டார்.

டயாலிசிஸ் நோயாளிகளுக்கும், மற்ற நோயாளிகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. மற்ற நோயாளிகள் ரெயில் பெட்டிகளில் ஏறி, இறங்கும் பயணிகளை போல் வருவார்கள்... போவார்கள்... அதாவது அட்மிட் ஆகி ஒரு வாரம், 10 நாளில் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார்கள். அதன் பிறகு வேறு நோயாளி அந்த படுக்கைக்கு வருவார்.

இப்படி வரும்வேறு வேறு நோயாளிகளை செவிலியர்கள் பார்ப்பார்கள். ஆனால் டயாலிசிஸ் நோயாளிகள் அப்படி அல்ல. மாதக்கணக்கில், வருடக்கணக்கில் வருபவர்கள். வாரம் 3 நாட்கள் வருவார்கள். வருகின்ற ஒவ்வொரு நாளும் நாலு மணி நேரம் சிகிச்சை பெறுவார்கள்.

அந்த 4 மணி நேரமும் செவிலியரின் கண்காணிப்பில் இருப்பார்கள். இப்படி பல வருடங்கள் வந்து கொண்டிருப்பார்கள். அந்த நோயாளிகளும் மருத்துவமனையின் ஒரு அங்கமாகவே கிட்டத்தட்ட ஆகி விடுவார்கள். 4 மணி நேரம் டயாலிசிஸ் செய்யப்படும் நோயாளியிடம் மருத்துவர் செலவழிப்பது 5 முதல் 10 நிமிடங்களாகத்தான் இருக்கும். ஆனால் செவிலியர்கள் அப்படி அல்ல முழு நேரமும் அவர்களுக்கு உதவியாக அருகில் இருந்து கவனிப்பவர்கள்.

காலை 7 மணிக்கு முதல் நோயாளிக்கு டயாலிசிஸ் செய்ய வேண்டும் என்றால் காலை 6.30 மணிக்கே செவிலியர் வந்து விடுவார். மிஷினை தயார் செய்து மருந்துகளை எடுத்து வந்து தயார் நிலையில் இருப்பார். நோயாளி ஏற்கனவே மிகவும் பரிட்சையமானவராக இருப்பதால் வந்த உடன் ஆரம்பித்து விடுவார்கள்.

நோயாளிகளுக்கு உதவியாக வருபவர்களும், டயாலிசிசை பற்றி முழுமையாக தெரிந்து கொள்வார்கள். அப்படித்தான் நான் தஞ்சாவூர் மருத்துவமனையில் பணியாற்றி கொண்டிருந்த போது 9 வயது சிறுவன் ஒருவனுக்கு டயாலிசிஸ் செய்ய வேண்டியது வந்தது. அவனுக்கு 300 முறைக்கு மேல் வயிற்றில் டயாலிசிஸ் செய்தோம். அப்போது அந்த சிறுவனின் சகோதரி துணைக்கு வருவார். டயாலிசிஸ் செய்வதை அருகில் இருந்தே பார்த்து கொண்டிருப்பார். அடுத்த சில நாட்களில் எப்போது, எந்த மருந்து தேவைப்படும் என்பதெல்லாம் தெரியும். அதேபோல் வார்டில் அந்த மருந்து எங்கே இருக்கும் என்பது தெரியும். அதையெல்லாம் செவிலியருக்கு அவரே எடுத்துக் கொண்டு கொடுத்து விடுவார்.

அதுமட்டுமல்ல தனது சகோதரனுக்கு உதவியாக இருந்த அந்த பெண் வார்டில் டயாலிசிஸ் செய்ய வரும் எல்லோருக்குமே உதவி செய்வார். டயாலிசிஸ் முடிந்து பஸ்சுக்கு செல்பவர்களை பஸ் ஏற்றி விடும் வேலையை கூட செய்திருக்கிறார். பொதுவாக டயாலிசிஸ் வார்டில் பணியாற்றுகிற செவிலியர்களின் பணி மெச்சதகுந்த பணி. சிறுநீரக டாக்டர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருப்பவர்களும், நோயாளிகளுக்கு உறுதுணையாக இருப்பவர்களும் அவர்கள் தான்.

ஒருமுறை பிறந்து 30 நாட்கள் ஆன நிலையில் ஒரு பச்சிளம் குழந்தைக்கு சிறுநீரகம் செயல்படவில்லை. சிறுநீர் வெளியேற வில்லை என்று கொண்டு வந்தார்கள். இவ்வளவு சிறு குழந்தைக்கு எப்படி டயாலிசிஸ் செய்வது என்று சிலர் யோசித்தார்கள். ஆனால் நான் துணிந்து அந்த குழந்தைக்கு வயிற்றில் துவாரம் போட்டு டயாலிசிஸ் செய்தேன். முதல் நாள் டயாலிசிஸ் செய்ததும் குழந்தைக்கு சிறுநீர் வெளியேறியது. அதன் உடல் நிலையும் சற்று முன்னேறியது. ஆனால் அந்த குடும்பம் மிகவும் ஏழ்மை பட்ட குடும்பம். டயாலிசுக்கு தேவையான திரவம் வாங்குவதற்கு கூட வசதியிலாதவர்கள். எனவே சமாளிக்க முடியாமல் திணறியிருக்கிறார்கள். இதை கேள்விபட்டதும் அந்த வார்டு மருத்துவர் அந்த குழந்தையை அரசினர் குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு செல்லும் படி பரிந்துரை செய்து விட்டார்.

மறுநாள் நான் பார்க்க சென்ற போது குழந்தையை அரசினர் குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு அனுப்ப போகும் தகவலை சொன்னார்கள். எனக்கு அதில் கொஞ்சமும் உடன்பாடு இல்லை. குழந்தையின் உடல் இப்போது தான் தேறி வருகிறது. இங்கு வைத்து கவனித்தால் அடுத்த சில நாளில் சரியாகி விடும் என்று நினைத்தேன். ஆனால் அந்த குடும்பத்தினர் தங்கள் நிலையை எண்ணி அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லவும் தயாராகி விட்டார்கள்.

ஆனால் மறுநாள் நான் அந்த வார்டுக்கு போன போது அங்கு 4 பாட்டில் திரவம் வாங்கி வைக்கப்பட்டு இருந்தது. அது பற்றி கேட்ட போது பகலில் பணியில் இருந்த செவிலியர் தனது சொந்த காசில் வாங்கி கொடுத்தது தெரியவந்தது. இதேபோல் ஒருமுறை ஒரு நோயாளிக்கு ரத்தம் தேவைப்பட்டது. அரசு ஆஸ்பத்திரியை பொறுத்தவரை வெளியில் இருந்து ரத்தம் வாங்கி வர முடியாது. குறுதி கொடையாளர்கள் நேரில் வந்து தானம் செய்யலாம். அதற்கும் அப்போது சாத்தியப்பட வில்லை. அதேநேரம் அந்த நோயாளியை காப்பாற்றுவதற்கு அங்கிருந்த நர்ஸ் ஒருவர் ரத்ததானம் செய்வதை கேள்விப்பட்டேன். இப்படி டயாலிசிஸ் நோயாளிகளுடன் இருக்கும் செவிலியர்களும் அந்த குடும்பத்தில் ஒருவராக மாறிவிடு கிறார்கள். சில நோயாளிகள் இந்த நர்சுதான் எனக்கு டயாலிசிஸ் செய்ய வேண்டும் என்று கேட்பது உண்டு. காரணம் அவர் ஊசி போட்டால் தான் வலிக்காது. அவர் நன்றாக செய்வார் என்றெல்லாம் சொல்லுவார்கள்.

அதாவது நேயாளிகளின் இதயத்தையே அவர்கள் வென்று விடுகிறார்கள். நோய் எவ்வளவு கொடுமையாக இருந்தாலும் எவ்வாறு உதவி செய்கிறோமோ அதை பொறுத்து அதை தாங்கிக் கொள்ளும் பக்குவம் நோயாளிகளுக்கு ஏற்பட்டு விடும். இப்படித்தான் ஒருமுறை நான் தஞ்சாவூர் ஆஸ்பத்திரியில் பணியை முடித்து விட்டு இரவு வீட்டுக்கு வந்துவிட்டேன். வீட்டில் நானும், எனது மனைவி தமிழிசையும் தூங்கிக்கொண்டு இருந்தோம். அப்போது திடீரென்று கதவு தட்டப்பட்டது. வெளியே வந்து பார்த்ததும் ஆஸ்பத்திரிக்கு ஒரு செவிலியர் ஒரு நோயாளி மிகவும் சிரமப்படுவதாக கூறினார்.

வெளியே அடைமழை கொட்டிக்கொண்டு இருந்தது. நானும் எனது மனைவியும் மழைக்கோர்ட்டு எடுத்து அணிந்து கொண்டு ஸ்கூட்டரில் ஆஸ்பத்திரிக்கு சென்றோம். நோயாளி ஒருவருக்கு வயிறு வீங்கிப்போய் சிறுநீர் வெளியேற வில்லை. நிலைமை மோசமாகி விட்டது. இனி காப்பாற்ற முடியாது என்று சொல்லி தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து அனுப்பி இருக்கிறார்கள். அவரை காரில் அழைத்து சென்ற கார் டிரைவர் சொல்லி இருக்கிறார். சென்னையில் இருந்து ஒரு டாக்டர் அரசு ஆஸ்பத்திரியில் இருக்கிறார். இந்த மாதிரி சிறுநீர் வெளியே வராமல் சிரமப்படுபவர்களுக்கு சிகிச்சை அளித்து குணமாக்கி விடுகிறார். எனவே நீங்களும் அங்கு போய் பாருங்களேன் என்று கூறி இருக்கிறார். அதை கேட்டு உடனே காரை திருப்பிக்கொண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து இருக்கிறார்கள். நான் நேரில் போய் பார்த்து அவர்களுக்கு டயாலிசிஸ் செய்து விட்டு அதிகாலையில் வீடு திரும்பி தூங்கிக்கொண்டு இருந்தேன். காலை 8 மணி அளவில் கண்விழித்து வெளியே வரும்போது வீட்டுக்கு வெளியே பலர் கூடி இருந்தனர். அவர்களை பார்த்ததும் அரசியல்வாதிகள் என்பது நன்றாகவே தெரிந்தது.

ஆனால் எதற்காக கூடி இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. நான் வெளியே வந்து கேட்டபோது தான் அந்த முக்கிய அரசியல் பிரமுகர் காரில் இருந்து வெளியே வந்து கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்னபடி நீங்கள் இரவில் காப்பாற்றியது எனது உறவினர். அதனால் தான் நன்றி சொல்ல வந்தேன். நீங்கள் அதிகாலையில் தான் வீட்டுக்கு வந்ததை அறிந்தேன். நீங்கள் கண்வி ழிக்கட்டும் என்று 2 மணி நேரமாக காத்திருந்தேன் என்றார். அதை கேட்டு நெகிழ்ந்து போனேன்.

இன்றும் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கும் அவர் நோயாளிகளுக்கு பல உதவிகளை அரசு மூலம் செய்து வருகிறார். என்னிடம் சிகிச்சை பெற்ற பலர் சிறுநீரக நோயாளிகளுக்கு அரசின் நிதி உதவியையும் வாங்கி கொடுத்து இருக்கிறார். சிறுநீரக நோய் பொருளாதார ரீதியிலும், மன ரீதியிலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரிந்ததே. அவர்களுக்கு எல்லாம் தேவை ஆறுதல், ஒத்துழைப்பு உறுதுணை தான்.

பயப்பட வேண்டாம்!

டயாலிசிஸ் செய்யும் போது சில நேரங்களில் கால்கள் இழுக்கிறது. ரத்த அழுத்தம் கூடுகிறது. குறையவும் செய்கிறது என்று பயப்படுவார்கள். ஆனால் பயப்பட தேவையில்லை. டயாலிசிஸ் செய்யும் போது எடுக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக இருந்தால் கால்கள் இழுக்கும். டயாலிசிஸ் நீரின் அளவு அதிகமாக இருந்தாலும், உணவு எடுத்துக்கொண்டாலும் ரத்த அழுத்தம் குறையும்.

உடலில் உப்பின் அளவும், தண்ணீரின் அளவும் அதிகமாக இருந்தாலும், ரத்த அழுத்தத்துக்கான மாத்திரை எடுத்துக் கொள்ளாமல் இருந்தாலும் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். டயாலிசிஸ் செய்ய போகும் நாளில் ரத்த அழுத்தத்துக்கான மாத்திரை மட்டும் சாப்பிட வேண்டும். வேறு எந்த மாத்திரையும் சாப்பிட கூடாது. வாரம் இரு முறை ரத்தத்துக்கான ஊசி கண்டிப்பாக போட வேண்டும்.

தொடரும்...

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com