என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    கல்லீரலை பாதுகாப்பது எப்படி?
    X

    கல்லீரலை பாதுகாப்பது எப்படி?

    • கல்லீரல் கொழுப்பு நோய் பாதிப்பினைத் தவிர்க்கும்.
    • ஆரோக்கியமான கல்லீரல் உடலை காக்கும் அமைதியான தேவதை.

    இன்று கல்லீரலுக்கென்றே சிறப்பு சிகிச்சை பிரிவுகள் நிறைய ஏற்படுத்தப்பட்டுள்ளன. காரணம் அந்த அளவிற்கு கல்லீரல் பாதிப்பு பரவலாகக் காணப்படுகின்றது.

    கல்லீரல் மனித உடலின் சக்தி மையம் என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது. உணவை செரிக்கும் முக்கியமான உறுப்புகளில் கல்லீரலும் ஒன்று. நச்சுகளை வெளியேற்றுகின்றது. ஹார்மோன்களை சமநிலைப்படுத்துகின்றது என 500-க்கும் மேற்பட்ட கல்லீரல் பணியினைச் சொல்லலாம்.

    கல்லீரல் சத்தமில்லாது உடல் பணியினைச் செய்கிறது

    கல்லீரல் வயிற்றின் வலது பக்கத்தில் விலா எலும்புக்களுக்கு அடியில் அமைந்துள்ளது பெரிய உறுப்பு. இதனை பெரிய தொழிற்சாலை என்றே சொல்லலாம்.

    * பித்த நீரினை உற்பத்தி செய்கின்றது. ரத்தத்தில் நச்சுகளை நீக்குகின்றது. ரத்தம் உறைவதற்கான புரதங்களை உருவாக்குகின்றது. ஹார்மோன் அளவினை சீர்படுத்துகின்றது. ஊட்ட சத்துகள். வைட்டமின்கள், தாதுக்கள், குளுகோசினை சேமிக்கின்றது.

    இத்தகு கல்லீரல் பாதிக்கப்பட்டால் உடல் என்றாவது? பொதுவில் மது, வைரஸ் தொற்று ஏ.பி.சி, கொழுப்பு கல்லீரல் நோய், மருந்துகளின் பக்க விளைவுகள், மரபணு கோளாறுகள், தவறான உணவு பழக்கங்கள் இவை பாதிப்பிற்கு முக்கிய காரணம் ஆகின்றன.

    கல்லீரல் பாதிப்பினால் மஞ்சள் காமாலை-தோல், நகம், கண்கள் மஞ்சளாக இருக்கும். பிலிரூபின் ரத்தத்தில் அதிகமாக இருக்கும்.

    * வயிறு வலி, வீக்கம், வலது பக்க மேல் வயிற்றில் வலி, வீக்கம், கல்லீரல் வீக்கம் அல்லது திரவம் சேருவதால் ஏற்படும் பாதிப்பு.

    * அதிக சோர்வு, எப்போதும் பலவீனமாய் உணர்வது. எப்போதும் பலவீனமாக இருத்தல், கல்லீரல் ஆற்றல் உற்பத்தியை பாதிக்கின்றது.

    * அரிப்பு- விடாமல் உடலில் அரிப்பு, பித்த அமிலம் தோலில் சேருவதால் அரிப்பு ஏற்படுகின்றது.

    * அயர்ந்த சிறுநீர்- சிறுநீர் பழுப்பு நிறமாக இருக்கும். பிரிரூபின் சிறுநீரில் கலக்கின்ற காரணத்தினால் ஏற்படுகின்றது.

    * மன குழப்பம்- கவனக்குறைவு, மறதி இருக்கும், நச்சுகளின் பாதிப்பால் ஏற்படுகிறது.

    * பசியின்மை, எடை குறைதல்- ஊட்டச் சத்தினை உறிஞ்சுவதில் குறைபாடு.

    * எளிதில் சிராய்ப்பு ஏற்படும். ரத்த கசிவு, ரத்த போக்கு ஏற்படலாம், ரத்த உறைதல் குறைபாட்டால் ஏற்படுகின்றது.

    கல்லீரல் பிரச்சினை பிரிவுகள்

    * வைரஸ் தொற்றில் ஏ,பி,சி பிரிவுகள் உள்ளன. ஏ பிரிவு அசுத்தமான உணவு. நீரால் பரவுகின்றது. மஞ்சள் காமாலை, வயிற்றுப் பிரட்டல் ஆகியவை இருக்கும்.

    * வைரஸ் பி, சி பிரிவு ரத்தம், உடல் திரவங்கள் மூலம் பரவலாம். முதலில் அறிகுறிகள் கூட காட்டாமல் இருக்கலாம். ஆனால் இவை கல்லீரல் புற்று நோய் பாதிப்பு வரைக் கூட ஏற்படுத்தலாம்.

    * கொழுப்பு கல்லீரல்- இது இரு பிரிவு படும். ஆல்கஹால் சார்ந்தது. அடுத்தது ஆல்கஹால் பழக்கம் இல்லாதவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு. இதற்கு நீரிழிவு நோய், உடல் பருமன், கொழுப்பு உணவு ஆகியவை காரணம் ஆகின்றன. வயிற்று வலி, சோர்வு ஆகிய வெளிப்பாடுகள் இருக்கும்.

    கமலி ஸ்ரீபால்

    * சிரோசிஸ்- இது கல்லீரலில் வடுக்களை ஏற்படுத்துவது ஆகும். மது, வைரஸ், பிற நோய்கள் இதற்கு காரணமாக இருக்கலாம். வயிறு வீக்கம், கால் வீக்கம், குழம்பிய மனம் போன்றவை காணப்படும்.

    * கல்லீரல் புற்று நோய்- இது கடுமையான ஆபத்தான நிலை. வைரஸ் பி, சி, சிரோசிஸ் இவை காரணமாக அமையலாம். எடை குறைந்து மெலிந்து இருப்பர், மஞ்சள் காமாலை, வயிற்று வலி பாதிப்பு இருக்கும்.

    * ஆட்டோ இம்யூன் கல்லீரல் நோய்கள்- உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு கல்லீரலைத் தாக்குவதால் ஏற்படும் பாதிப்பாகும். எதனையும் ஆரம்ப காலத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது நல்லது.

    * ரத்தப் பரிசோதனை, கல்லீரல் செயல்பாடு சோதனை, வைரஸ் சோதனை, பிலிரூபின் சோதனை ஆகியவை அவசியம்.

    * இமேஜிங்ஸ்கேன், அல்ட்ராசவுண்ட் பரிசோதனைகள் கல்லீரல் அளவு, வீக்கம், பாதிப்பு இவற்றினை அறிய உதவும்.

    * பயாபசி-புற்று நோய் பாதிப்பினை உறுதி செய்யும் பரிசோதனை முறையாகும்.

    வரும்முன் தடுப்போம் மூலமாக கல்லீரலை எப்படி பாதுகாக்கலாம்?

    * மது அருந்துவதை தவிர்ப்பது சிரோசிஸ் பாதிப்பினை வெகுவாய் குறைக்கும்.

    * சத்தான உணவு- காய்கறிகள், பழங்கள், முழுதானியங்கள் போன்ற கொழுப்பு சத்து குறைந்த உணவுகள் ஆகியவைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இது கல்லீரல் கொழுப்பு நோய் பாதிப்பினைத் தவிர்க்கும்.

    * சுத்தத்தினை கடை பிடித்தல். ரத்த பரிமாற்றம், தரமான ஊசிகள் போன்றவை அவசியம்.

    * உடற்பயிற்சி அவசியம். உடல் பருமன், சர்க்கரை கட்டுப்பாடு, இவற்றுக்கு உறுதுணையாய் இருக்கும்.

    * முறையான மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும்.

    * வைரஸ் தடுப்பூசிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    * பச்சை காய்கறிகள், கீரை வகைகள், புரோகலி, காலி பிளவர் மற்றும் மீன், பருப்பு வகைகள், முட்டை வெள்ளைக்கரு மற்றும் 2 முதல் 3 லிட்டர் நீர் அன்றாடம் குடித்தல் மற்றும் அதிக சர்க்கரை, துரித உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு ஆகியவற்றினை தவிர்த்தல் போன்றவை கல்லீரலை பாதுகாக்க உதவும்.

    (செரிமானத்தில் கல்லீரல் பங்கு என்பது மிக முக்கியமானது. பித்த நீரை உருவாக்குகின்றது. கொழுப்பு செரிமானத்திற்கு இது முக்கியமானது.

    * ரத்தத்தில் நச்சுத் தன்மையினை நீக்குகின்றது.

    * வளர் சிதை மாற்றங்களுக்குப் பொறுப்பானது.

    * நஞ்சு, மருந்து, சுற்றுப்புற சூழலால் உடலில் சென்று தீங்கு விளைவிக்கும் பொருட்கள். இவைகளை ரத்தத்தில் இருந்து நீக்குகின்றது.

    * கல்லீரல் செல்கள் உடலுக்கு தேவையான பல புரதங்களை உற்பத்தி செய்கின்றன.

    * ரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்த உதவும். ஆஞ்சியோ டென்சினோஜன் என்ற ஹார்மோனை வெளியிடுகின்றது. மேலும் பல செயல்கள் பற்றி முன்பே அறிந்தோம்.

    கல்லீரல் ஆரோக்கியம் வாழ்வின் ஆரோக்கியத்திற்கு அடிப்படை தேவை ஆகும்.

    ஆரோக்கியமான கல்லீரல் உடலை காக்கும் அமைதியான தேவதை.

    தயிர் குளிர் காலத்தில் எடுத்துக் கொள்ளலாமா?

    சிலருக்கு அலர்ஜி இருக்கலாம். மற்றபடி தயிர் குளிர் காலத்திலும் எடுத்துக் கொள்ளலாம். சில்லென்று இல்லாமல் எப்போதும் சாதாரண இயற்கை நிலையில் எடுத்துக் கொள்வது நல்லது.

    * தயிர்-கால்சியம், புரதம், பி12, பாஸ்பரஸ், பொட்டாசியம் சத்து நிறைந்தது.

    * கால்சியம் பாஸ்பரஸ் எலும்பு ஆரோக்கியத்திற்கு அவசியமானது.

    * நல்ல குடல் பாக்டீரியா கொண்டது. வைட்டமின் பி சத்து கொண்டது.

    கொலஸ்டிராலை குறைக்கும். உயர் ரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்தும்.

    இருதய ஆரோக்கியதற்கு நல்லது.

    வயிற்று போக்கு உள்ளவர்களுக்கு தயிர் நல்லது.

    உடல் பருமன் குறையும்.

    குடல் புற்றுநோய் அபாயம் குறையும்.

    அதிகம் அடர்ந்த தயிராக இல்லாமல் கொழுப்பு சத்து குறைவான பாலில் தயாரிக்கும் தயிர் நல்லது.

    உப்பு-இது தாது உப்புகளில் ஒன்று. உப்பு சத்து உடலில் குறையும் போது தலைவலி, வயிற்று பிரட்டல், சோர்வு, தசை பிடிப்பு, குழப்பம், வலிப்பு, கோமா நிலை போன்றவை ஏற்படலாம்.

    உப்பு குறைபாடு செல்களை குறிப்பாக மூளை செல்களை பாதிப்படைய செய்யும்.

    பண்டை காலம் முதல் இன்றுவரை அநேகரும் நம்நாட்டில் உப்பளங்களில் இருந்து தயாரிக்கப்படும் கல் உப்பு, கடல் உப்பினை சமையலுக்கு பயன்படுத்துகின்றனர்.

    கடல் உப்பில் சோடியம் குளோரைடு உள்ளது. இது உடலில் நீர் சத்து, ரத்த அழுத்தம் இவற்றினை சீர்செய்ய உதவுகிறது. மேலும் இது அதிக சுத்தகரிப்பு முறை, பதப்படுத்துதல் இவை இல்லாததால் பொட்டாசியம், இரும்பு, கால்சியம் போன்ற தாதுக்களும் உடையது. இந்த காரணங்களினால் இதை உயர்ந்ததாக குறிப்பிடுபவரும் உண்டு. ஆனால் இந்த மற்ற தாதுக்களின் பலனை பெற நாம் அதிகளவில் உப்பினை எடுத்துக் கொள்ள முடியாது. ஆனால் இந்த தாதுக்களை மற்ற உணவு பொருட்களில் இருந்தும் பெற முடியும். சோடியம் உடலின் நீர் சத்து சம நிலைக்கு முக்கியமானது. இது குறையும் போது உடலில் நீர்சத்து குறைதல், ரத்த அழுத்தம் மாறுபடுதல் ஆகியவை ஏற்படலாம். உப்பு அதிகம் உட்கொள்வதும், குறைந்து உட்கொள்வதும் ரத்த அழுத்த பாதிப்பினை ஏற்படுத்தும்.

    குளோரைட் வயிற்றில் தேவையான அளவு ஆசிட் சுரக்க அவசியம் ஆகின்றது. சோடியம் குளோரைடில் உள்ள குளோரைட் சிறிது சத்துக்களை உறிஞ்சி உடலுக்கு அனுப்ப உதவுகின்றது. ஆக அளவான உப்பு செரிமானத்திற்கு உதவும். உப்பு கலந்த நீரில் குளிப்பது சரும வறட்சி, வீக்கத்தினை நீக்கும். கடல் உப்பில் மக்னீசியம் சத்து அதிகம் இருப்பதால் சரும பாதிப்புகளுக்கு நல்லது.

    அதிக உப்பு உயர் ரத்த அழுத்தத்தினை ஏற்படுத்தும். இதன் காரணமாகவே சிப்ஸ், ஊறுகாய், பதப்படுத்தப்பட்ட உணவுகள், நொறுக்கு தீனி போன்றவற்றினை தவிர்க்க அறிவுறுத்தப்படுகின்றது.

    * பொதுவில் உயர் ரத்த அழுத்தம், இருதய பாதிப்பு, சிறுநீரக நோய் உள்ளவர்களை அவருக்கேற்ற அன்றாட உப்பின் அளவினை டாக்டர் பரிந்துரைப்பார்.

    'அதிக உப்பு அமைதியாய் கொல்லும்' என்பர்.

    அயோடின் சேர்க்கப்பட்ட உப்பு இன்று பரவலாக பழக்கத்தில் உள்ளது.

    * தைராய்டு ஹார்மோன் நோய் இயங்க உதவும்.

    * அயோடின் குறைபாட்டினைத் தவிர்க்க உதவும்.

    * எலும்பு, மூளை வளர்ச்சிக்கு உதவும். குறைந்த அயோடின் உணவு அறிவுறுத்தப்படுபவர்கள் அயோடின் கலந்த உப்பினை தவிர்ப்பது அவசியம்.

    வளர்ந்தவர்கள் 2,300 மி.கி.க்கு குறைந்த அளவு சோடியம் உணவில் சேர்க்கலாம். 1500 மி.கி. என்பது மிகச் சிறந்தது. இது ஒரு டீஸ்பூன் (5 கி) உப்பு அளவு எனலாம். ஆனால் நாம் உண்ணும் உணவில் மிக அதிக அளவு உப்பு உள்ளது. ரெடிமேட் உணவுகள், பாக்கெட் உணவுகளில் அதிக அளவு உப்பு இருக்க வாய்ப்புகள் அதிகம். எனவே வீட்டில் சமைத்து அளவான உப்பு சேர்த்து உண்ண பழக வேண்டும்.

    Next Story
    ×