சேந்தமங்கலம் அருகே அ.தி.மு.க.பிரமுகர் கொலை- போலீசார் விசாரணை

சேந்தமங்கலம் அருகே கட்டப்பஞ்சாயத்து தகராறில் அ.தி.மு.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆர்.ஆர்.பி.சுரேஷ்
ஆர்.ஆர்.பி.சுரேஷ்
Published on

கொல்லிமலை:

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை சேர்ந்தவர் ஆர்.ஆர்.பி.சுரேஷ் (வயது 46).

இவர் சேந்தமங்கலம் ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளராகவும், வெட்டிக்காடு தொடக்க கூட்டுறவு வங்கி தலைவராகவும் பதவி வகித்து வந்தார். மேலும் இவர் ரியல் எஸ்டேட், பைனான்ஸ் உள்ளிட்ட தொழில்கள் செய்து வந்தார்.

நேற்று இரவு ஆர்.ஆர்.பி. சுரேஷ் கோவில் சம்மந்தமான பிரச்சனை தொடர்பாக பேசிவிட்டு தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் வெட்டுக்காடு பஸ் நிறுத்தத்தில் நிறுத்தி இருந்த தனது காரை எடுப்பதற்காக வந்தார்.

அப்போது அங்கு மறைந்து இருந்த மர்ம நபர்கள் 2 பேர் வெட்டுக்காடு பஸ் நிறுத்தம் டீக்கடை முன்பு ஆர்.ஆர்.பி.சுரேஷையும், அவரது நண்பரையும் வழிமறித்து மிளகாய் பொடி தூவினர். பின்னர் சுரேஷை கீழே தள்ளி அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஆர்.ஆர்.பி.சுரேஷை டீக்கடை மற்றும் பஸ் நிறுத்தம் அருகே இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக உறுதி செய்தனர்.

மர்ம நபர்கள் 2 பேரும் சுரேஷின் கை, முகம் மற்றும் கழுத்து உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட இடங்களில் சரமரியாக அரிவாளால் வெட்டி உள்ளனர்.

அ.தி.மு.க. பிரமுகர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாமக்கல், சேந்த மங்கலம், பேளூக்குறிச்சி, ராசிபுரம் உள்ளிட்ட பகுதியில் உள்ள கட்சி நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கொலை சம்பவம் குறித்து பேளுக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு உத்தரவின்பேரில் ராசிபுரம் டி.எஸ்.பி.ஈஸ்வர மூர்த்தி மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ் (சேந்தமங்கலம்), விஜயகுமார் (வெண்ணந்தூர்), ராம கிருஷ்ணன் (பேளூக்குறிச்சி) ஆகியோர் தலைமையில் 3தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தனிப்படையிலும் தலா 1 சப்-இன்ஸ்பெக்டர் வீதம், 6 ஏட்டுகள் இடம் பெற்றுள்ளனர்.

ஆர்.ஆர்.பி.சுரேஷ் கொலை செய்யப்பட்டது ஏன்? என்பது குறித்தும் கொலையாளிகள் யார்? என்பது குறித்தும் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

சுற்று வட்டார பகுதிகளில் பிரச்சனைக்குரிய இடங்களை கட்டப் பஞ்சாயத்து செய்து ஆர்.ஆர்.பி.சுரேஷ் தன் பெயரில் அந்த நிலங்களை எல்லாம் கிரையம் செய்து பல பேரை ஏமாற்றியுள்ளதாக பலர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

இது போல் இவர் மீது சேந்தமங்கலம், பேளூக்குறிச்சி, நாமக்கல் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆர்.ஆர்.பி.சுரேசுக்கு ஏற்கனவே பைனான்ஸ் தொடர்பாக கொடுக்கல், வாங்கல் மற்றும் நிலப்பிரச்சனை உள்ளது.

அதே பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

இவரது நிலம் வெட்டுக்காடு பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை விற்பதாக ஊரில் கூறியிருந்தார். இதை அறிந்த ஆர்.ஆர்.பி.சுரேஷ் தான் அந்த நிலத்தை வாங்குவதாகவும், அதற்குரிய பணம் முழுவதையும் தான் தருவதாகவும் சிவகுமாரிடம் கூறினார்.

இதையடுத்து நிலத்திற்கு விலை பேசப்பட்டது. நிலத்தை எழுதி வாங்கியதும் சுரேஷ் முதலில் ரூ.3 ½ லட்சம் தொகையை சிவகுமாருக்கு கொடுத்தார். மீதி உள்ள பணத்தை பின்னர் தருவதாக கூறினார். ஆனால் அந்த பணத்தை கொடுக்கமால் நிலுவையில் வைத்திருந்தார். நிலத்தையும் முழுமையாக கையகப்படுத்தினார். பல முறை சென்று கேட்டும் பணத்தை அவர் கொடுக்கவில்லை. மிரட்டி அனுப்பியதாக தெரிகிறது.

இதனால் சிவகுமார் விரக்தி அடைந்தார். இனிமேல் ஆர்.ஆர்.பி.சுரேஷை விடக்கூடாது. பணத்தை தராததால் போட்டு தள்ளி விட வேண்டும் என ஆத்திரத்தில் இருந்தார்.

மேலும் அதே பகுதியை சேர்ந்தவர் விமல்குமார். இவர் தனது நிலத்தை சுரேஷின் நண்பர் குமார் என்பவரிடம் அடமானம் வைத்தார். அடமான வைத்த நிலத்தை குமார் வேறு ஒருவருக்கு விற்று விட்டார்.

பின்னர் விமல்குமார் அடமான தொகையை செலுத்தி தான் அடமானம் வைத்திருந்த நிலத்தை திரும்ப தன்னிடம் தருமாறு கேட்டார். ஆனால் நிலத்தை ஒப்படைக்கவில்லை. இதிலும் ஆர்.ஆர்.பி.சுரேஷ் தலையிட்டதாக தெரிகிறது. நிலத்தை இழந்த விமல் குமார் தன்னை ஏமாற்றி விட்டார்களே என மன வேதனை அடைந்தார்.

இப்படி அவரால் ஏமாற்றப்பட்டவர்கள் பலர். இந்த நிலையில் தான் ஏமாற்றப்பட்டவர்களில் ஒருவரான சிவகுமாரும், மற்றொருவரான விமல் குமாரும் சேர்ந்து திட்டம் தீட்டி இருவரும் ஆர்.ஆர்.பி.சுரேஷை போட்டு தள்ளி இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com