பசு பாதுகாவலர்களை தீவிரவாதிகளுடன் போரிட அனுப்பவேண்டும்: சிவசேனா காட்டம்

அமர்நாத் யாத்திரையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுடன் போரிட பசு பாதுகாவலர்களை அனுப்ப வேண்டும் என சிவசேனா கட்சி காட்டமாக விமர்சித்துள்ளது.
பசு பாதுகாவலர்களை தீவிரவாதிகளுடன் போரிட அனுப்பவேண்டும்: சிவசேனா காட்டம்
Published on

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட பா.ஜ.க., 'பிரதமர் பதவிக்கு போட்டியிடும் மோடி 56 இஞ்ச் மார்பளவு கொண்டவர். இதனால் அவர் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவார்' என பிரசாரம் செய்தது. தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அண்டை நாடான பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதை, 56 இஞ்ச் மார்பளவு கொண்ட பிரதமர் தடுத்து நிறுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

இதற்கிடையே, கடந்த திங்கட்கிழமை அன்று அமர்நாத் யாத்திரை மேற்கொண்ட பக்தர்கள் மீது, பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியதில் 7 பக்தர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 19 பேர் படுகாயம் அடைந்தனர். தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ள உள்ள சிவசேனா, தனது கட்சி பத்திரிகையான ’சாம்னா’வில், அமர்நாத் யாத்திரையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுடன் போரிட பசு பாதுகாவலர்களை அனுப்பவேண்டும் என மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க.வை கடுமையாக சாடியுள்ளது.

இதுகுறித்து சாம்னாவில் கூறுகையில், ‘இதுபோன்ற தாக்குதல்களை தடுத்து நிறுத்தப்போவது யார்? தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு வெற்றுத் தாள்களில் கண்டனம் தெரிவித்து, கண்ணீர் விட்டால் போதுமா? காஷ்மீரில் செயல்பட்டு வரும் அரசு முற்றிலும் செயலிழந்து விட்டது. காஷ்மீரில் நடந்து வரும் செயல்கள் நாட்டின் ஒற்றுமைக்கு ஆபத்தை விளைவிக்கும்.

காஷ்மீரில் தீவிரவாதிகள் வன்முறை மற்றும் தீவிரவாத செயல்களை நடத்தி வருகின்றனர். தற்போது காஷ்மீரில் நடக்கும் தீவிரவாத செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 56 இஞ்ச் மார்பளவு கொண்டவரின் அரசு தேவைப்படுகிறது.

பாகிஸ்தானுக்கும் தீவிரவாதிகளுக்கும் கடும் எச்சரிக்கை விடவேண்டும். காஷ்மீரில் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கி விட்டால் போதும், ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் பிரிக்கமுடியாத மாநிலம் என்பதை ஒரே வாரத்தில் உலகம் உணர்ந்து கொள்ளும்’ என குறிப்பிட்டுள்ளது.

இதுதொடர்பாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறுகையில், ‘மத்தியில் ஆளும் அரசு, விளையாட்டு, கலாசாரம் போன்ற விவகாரங்களுக்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் என்கின்றனர். ஆனால் இப்போது மதம் மற்றும் அரசியல் விவகாரங்களில் தான்

தீவிரவாத தாக்குதல் அதிகரித்து வருகிறது. மாட்டு இறைச்சிகளை கொண்டு செல்பவர்களை கண்டுபிடித்து அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்துவரும் பசு பாதுகாவலர்களை, அமர்நாத் யாத்திரையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுடன் போரிட ஏன் அனுப்பக் கூடாது?’’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com