செம்பட்டி அருகே பணத்தகராறில் தொழிலாளி அடித்து கொலை

செம்பட்டி அருகே பணத்தகராறில் தொழிலாளி அடித்து கொல்லப்பட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை
கொலை
Published on

ஆத்தூர்:

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே தெற்கு மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது57). இவரது மகன் கனகராஜ். தர்மத்துப்பட்டியில் இரும்பு கடை வைத்துள்ளார்.

சின்னத்துரைக்கும், அவரது சகோதரர் கூலித்தொழிலாளியான வெள்ளைச்சாமி (60)-க்கும் இடையே பணத்தகராறு இருந்து வந்தது. இதனால் அடிக்கடி அவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு மோதிக்கொண்டனர். அக்கம் பக்கத்தினர் சமரசம் செய்து வைத்தபோதும் பிரச்சினை தீரவில்லை.

சம்பவத்தன்றும் சின்னத்துரையும், வெள்ளைச்சாமியும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கனகராஜ் தனது தந்தைக்கு ஆதரவாக வெள்ளைச்சாமியிடம் தகராறு செய்தார். பின்னர் ஆத்திரம் அடைந்து அருகில் இருந்த கம்பியை எடுத்து வெள்ளைச்சாமியை கடுமையாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த வெள்ளைச்சாமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடினர். இதனை பார்த்தும் கனகராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து செம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து கனகராஜை தேடி வந்தார். இந்தநிலையில் அவர் திண்டுக்கல் ஜே.எம்.1 கோர்ட்டில் சரண் அடைந்தார். பணத்திற்காக தனது பெரியப்பாவையே வாலிபர் கொன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com