

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் நடைபெறுவதை தொடர்ந்து கடந்த 21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று நடந்த போராட்டம் கலவரமாக மாறியது.
10 பேர் துப்பாக்கி குண்டுக்கு பலியாகி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் 144 தடை உத்தரவை மேலும் நீட்டித்து இன்று ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடந்த சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளை கருத்தில் கொண்டு சட்டம்- ஒழுங்கை பராமரித்திட இன்று (23-ந்தேதி) 1 மணி முதல் 25-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 8 மணி வரை குற்றவியல் நடைமுறை சட்டம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
இந்த தடை உத்தரவு தூத்துக்குடி, திருச்செந்தூர் வட்டத்தை சேர்ந்த பகுதிகள் மற்றும் வேம்பார், குளத்தூர், ஆறுமுகமங்கலம், வேடநத்தம், ஓட்டப்பிடாரம், எப்போதும் வென்றான் ஆகிய குறுவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதற்கும் அமல்படுத்தி உத்தரவிடப்படுகிறது.
இந்த தடை உத்தரவு பள்ளி-கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலாவிற்காக வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள், ஆம்னி பேருந்துகள் ஆகியவற்றிற்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.