ஸ்கூட்டர் மீது லாரி மோதியது: சமையல் தொழிலாளி பலி

திருவாரூர் அருகே ஸ்கூட்டர் மீது லாரி மோதியதால் சமையல் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். சாலையின் குறுக்கே திடீரென மாடு வந்ததால் இந்த விபத்து நடந்துள்ளது.
விபத்து
விபத்து
Published on

திருவாரூர்:

திருவாரூர் புதுத்தெரு பகுதியை சேர்ந்தவர் ரவி(வயது55). சமையல் தொழிலாளியான இவர் நேற்று இரவு கடைவீதிக்கு சென்று பொருட்கள் வாங்கி விட்டு ஸ்கூட்டரில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். புதுத்தெரு பகுதியில் அவர் வீட்டின் அருகே சென்ற போது ஒரு மாடு சாலையின் குறுக்கே போக்குவரத்து இடையூராக வந்தது.

இதனால் தனது வாகனத்தை ரவி திருப்பினார். அப்போது எதிரே மயிலாடுதுறையில் இருந்து மளிகை பொருட்களை ஏற்றி கொண்டு வேகமாக வந்த லாரி, ரவி ஓட்டி சென்ற ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த திருவாரூர் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரவி உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் உயிரிழந்த ரவிக்கு சுமதி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த ஆண்டு திருவாரூர் பகுதியில் இரவு நேரங்களில் சாலைகளில் திரியும் மாடுகளால் 2 பேர் விபத்தில் உயிரிழந்தனர். எனவே சாலையில் கேட்பாரின்றி திரியும் மாடுகளை பிடித்து அகற்றி அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com