

வள்ளியூர்:
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள இளையநயினார் குளத்தை சேர்ந்த முத்துக்குமார் மகள் சுபாஷினி (வயது 5). இவர் வடக்கன்குளத்தில் உள்ள பாலகிருஷ்ணா பள்ளியில் யூ.கே.ஜி. படித்து வந்தாள். மாணவி சுபாஷினி பள்ளிக்கு சென்று விட்டு பள்ளி பஸ்சில் மாலையில் வீட்டுக்கு வந்தாள். பஸ்சை டிரைவர் திரவியராஜ் என்பவர் ஓட்டினார்.
பஸ்சில் இருந்து இறங்கி வீட்டுக்கு செல்வதற்காக சுபாஷினி பேருந்து பின்னால் சென்றாள். அப்போது பஸ் டிரைவர் திரவியராஜ் பஸ்சை பின்னோக்கி எடுத்தார். இதில் பஸ் பின்னால் நின்ற பள்ளி குழந்தை சுபாஷினி மீது மோதி ஏறியது. இதில் சுபாஷினி பலத்த காயம் அடைந்தாள். உடனே உறவினர்கள் ராதாபுரம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே சுபாஷினி பரிதாபமாக இறந்தாள்.
இதுபற்றி ராதாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய பள்ளிக்கு சொந்தமான பஸ்சை பறிமுதல் செய்தனர். பஸ் டிரைவர் திரவியராஜை போலீசார் கைது செய்தனர். பலியான குழந்தை உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனிடையே குழந்தை சுபாஷினியின் உறவினர்கள் மற்றும் அந்த கிராமத்தை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்டோர் குழந்தையின் உடலை வாங்க மறுத்து ராதாபுரம் பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது அவர்கள் கூறுகையில் குழந்தையின் மரணத்திற்கு உரிய நீதி வேண்டும், வடக்கன்குளம் பாலகிருஷ்ணா பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என கூறினர். பின்னர் முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்கள். பள்ளி வாகனம் மோதி குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.