

கோவை:
கோவை கோவில்பாளையம் அருகே உள்ள ராமன் குட்டையை சேர்ந்தவர் தனசேகரன். இவரது மகள் ஆர்த்தி (வயது 18). இவர் அன்னூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் ஆர்த்தி கடந்த 4 நாட்களாக மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றார். சம்பவத்தன்று மூச்சு திணறல் அதிகமானதால் அவரை அவரது பெற்றோர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆர்த்தியை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் தங்கவேலு. இவரது மனைவி வள்ளிநாயகம் (48). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சமையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று ஆஸ்பத்திரியில் வேலை செய்துகொண்டிருந்த இவர் மூக்கு பொடி போட்டார்.
அப்போது தொடர்ச்சியாக இருமல் வந்து கொண்டே இருந்தது. திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே வள்ளி நாயகம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.