ஆரணி அருகே மழைக்கு வீடு இடிந்து விழுந்து 9-ம் வகுப்பு மாணவி பலி

ஆரணி அருகே மழைக்கு வீடு இடிந்து விழுந்து 9-ம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். இதுகுறித்து, ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இடிந்து விழுந்த வீடு - பலியான மாணவி நித்யா
இடிந்து விழுந்த வீடு - பலியான மாணவி நித்யா
Published on

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த மேல் நகரை சேர்ந்தவர் வேலு. கூலித் தொழிலாளி. இவரது மனைவி சத்யா (35). இவர்களுக்கு நித்யா (13) மற்றும் ஆனந்தி (11) என்று 2 மகள்கள் இருந்தனர்.

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்து-வேறுபாடு ஏற்பட்டு கணவரை பிரிந்த சத்யா தனது மகள்களுடன், ஆரணி அடுத்த லாடப்பாடி கிராமத்திற்கு வந்துவிட்டார்.

லாடப்பாடி அருகே உள்ள கல்பூண்டி அரசுப் பள்ளியில் நித்யா 9-ம் வகுப்பும், அவரது தங்கை ஆனந்தி 2-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

இவர்கள், சுவர் எழுப்பிய குடிசை வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில், நேற்றிரவு வழக்கம் போல் அனைவரும் சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்கினார். இரவில் மழை பெய்ய ஆரம்பித்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழைக்கே, வீட்டின் சுவர் தளர்ந்து இடியும் நிலையில் இருந்தது. இதையறிமால், அவர்கள் வசித்து வந்தனர். இன்று அதிகாலை 2 மணியளவில், மழைக்கு வீடு திடீரென இடிந்து விழுந்தது.

தூங்கிக் கொண்டிருந்த மாணவி நித்யா மீது வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில், அவர் பலத்த காயமடைந்தார். அவரது தாத்தா பாக்கியநாதன் (60) காயத்துடன் உயிர் தப்பினார்.

பாட்டி மல்லிகா, தாய் சத்யா, தாய்மாமன் சத்யராஜ், தங்கை ஆனந்தி ஆகிய 4 பேரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

உயிருக்கு போராடிய நித்யாவை, அவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் சென்றனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அவர் மாற்றப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி, இன்று காலை 5 மணியளவில் மாணவி நித்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சம்பவ இடத்தை ஆரணி தாசில்தார் சுப்ரமணி மற்றும் வருவாய்த்துறையினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com