வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டிவிகிதத்தை குறைத்தது பாரத ஸ்டேட் வங்கி

வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டிவிகிதத்தை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) குறைத்துள்ளது. வைப்புநிதி மீதான வட்டிவிகிதமும் குறைக்கப்பட்டுள்ளது.
வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டிவிகிதத்தை குறைத்தது பாரத ஸ்டேட் வங்கி
Published on

புதுடெல்லி:

வீடு மற்றும் வாகனங்கள் வாங்குவதற்காக அனைத்து வங்கிகளும் கடன்கள் வழங்கி வருகின்றன. இந்த கடன்களுக்கு ஒவ்வொரு வங்கியிலும் ஒவ்வொரு விதமான வட்டிவிகிதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. 

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்.பி.ஐ., வீட்டுக் கடன் மற்றும் வாகன கடன் மீதான வட்டி விகிதங்கள் 5 அடிப்படை புள்ளிகளைக் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தை 8.35 சதவீதத்திலிருந்து 8.30 சதவீதமாக குறைத்துள்ளது. இது வங்கித்துறையிலேயே மிகவும் குறைவானதாகும். இதேபோல், வாகன கடன்களுக்கான வட்டிவீகிதத்தை 8.75 சதவீதத்திலிருந்து 8.70 சதவீதமாக குறைத்துள்ளது.  நவம்பர் 1-ம் தேதி முதல் புதிய வட்டிவிகிதம் அமலுக்கு வந்துள்ளது. 

இதையடுத்து மற்ற வங்கிகளும் வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டிவிகிதத்தை குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மாதாந்திர சம்பளம் பெறும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 30 லட்ச ரூபாய் வரையிலான வீட்டுக்கடன்களுக்கான வட்டிவிகிதம் 8.30 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. 8.30 சதவிகிதத்திற்கு மேல் உள்ள தகுதியான வீட்டுக் கடன் வாடிக்கையாளர்கள் பிரதான் மந்திரி ஆவாஸ் திட்டத்தின்  கீழ் 2.67 லட்சம் ரூபாய் வட்டி மானியமும் பெறலாம்’, என கூறியுள்ளது.

நவம்பர் 1-ம் தேதி முதல் நிலையான வைப்புநிதி மற்றும் வைப்புநிதிகளின் மிதான வட்டிவிகித்தை பாரத ஸ்டேட் வங்கி அதிகபட்சமாக 25 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. 6.50 சதவிகிதத்திலிருந்த வைப்புநிதி மீதான வட்டிவிகிதம் 6.25 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com