ஜோகன்ஸ்பர்க் ஆடுகளத்தில் 187 ரன் நல்ல ஸ்கோர் தான்: புஜாரா
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்ஸ்பர்க் வான்டர்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
‘டாஸ்’ வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 77 ஓவர்களில் 187 ரன்னில் சுருண்டது.
கேப்டன் வீராட்கோலி 54 ரன்னும், புஜாரா 50 ரன்னும், புவனேஷ்வர்குமார் 30 ரன்னும் எடுத்தனர். ரபடா 3 விக்கெட்டும், மார்னே மார்கல், பிலாண்டர் ஆண்டில் பெகலுவேயா ஆகியோர் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்கா நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 6 ரன் எடுத்து இருந்தது. மர்கிராம் 2 ரன்னில் புவனேஷ்வர்குமார் பந்தில் ஆட்டம் இழந்தார். எல்கர் 4 ரன்னும், ரபடா ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.
நேற்றைய ஆட்டம் தொடர்பாக இந்திய பேட்ஸ்மேன் புஜாரா நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜோகன்ஸ்பர்க் ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது சவாலாக இருந்தது. நான் விளையாடிய மைதானங்களில் இந்த பிட்ச் மிகவும் கடினமான ஒன்று. இதனால் இந்த ஆடுகளத்தில் 187 ரன் என்பது நல்ல ஸ்கோர் தான். சாதாரண மைதானத்தில் 300 ரன் எடுப்பதற்கு இந்த ரன் சமமானதே.
முதல் டெஸ்டில் விளையாடிய கேப்டவுன் ஆடுகளத்தைவிட இந்த பிட்ச் சவாலாகவே இருந்தது. ஒட்டு மொத்தத்தில் நாங்கள் சிறப்பாகவே பேட்டிங் செய்து போதுமான ரன்களை எடுத்து இருக்கிறோம்.
இனி நாங்கள் சிறப்பாக பந்துவீசுவது தான் முக்கியமானது. எங்களது பவுலர்கள் நேர்த்தியுடன் பந்துவீசுபவார்கள். இன்றைய ஆட்டத்தில் அவர்கள் நன்றாக பந்துவீசு வார்கள் என்று என்னால் உறுதியாக கூறமுடியும்.
தென்ஆப்பிரிக்கா தொடக்க வீரர் மர்கிராம் விக்கெட்டை கைப்பற்றிய புவனேஷ்வர்குமாரை இந்திய வீரர்கள் பாராட்டும் காட்சி
இந்த ஆடுகளத்தில் விக்கெட்டை காப்பாற்றி கொள்வது மிகவும் கடினம்.
இவ்வாறு புஜாரா கூறினார்.

